Sync Movie Review : ஒன்றரை மணி நேரத்தில் போதுமான அளவுக்கு திகிலூட்டியதா சிங்க் திரைப்படம்? குட்டி விமர்சனம் இதோ!
அறிமுக இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கத்தில் கிஷன் தாஸ், மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சிங்க்” (sync). சிவராம் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை நாம் காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தின் கதையில் இயக்குனராக முயற்சி செய்யும் கிஷன் தாஸ், ஒரு தயாரிப்பாளரை சந்தித்து விட்டு தோல்வி முகத்தோடு வருகிறார். அவரை உற்சாகப்படுத்தும் வண்ணம் காதலியான மோனிகா சின்னகோட்லா பாண்டிச்சேரிக்கு ட்ரிப் போகலாம் என சொல்கிறார். இந்த பயணத்தில் சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகிய நண்பர்களும் உடன் செல்கிறனர்.
இதனிடையே மோனிகாவை பிராங்க் செய்யலாம் என மற்ற 3 பேரும் முடிவெடுக்கின்றனர். அதன்படி செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுகிறது. இதனை காவல்துறையினரை கொண்டு மூடி மறைக்கின்றனர். இதுகுறித்து 4 பேரும் வீடியோ காலில் இணைந்து பேசும் போது, அனைவரது வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் என்ன? இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
படம் முழுவதும் கிஷன் தாஸ், மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகிய 4 பேரை சுற்றி தான் நகர்கிறது. அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தாலும், சௌந்தர்யா நந்தகுமார் தான் கதையில் ஒரு திகில் உணர்வை ஏற்படுத்துகிறார். அவரின் பயந்த சுபாவம், திக்கி பேசுவது என பாராட்டைப் பெறுகிறார்.
மொத்தமே ஒன்றரை மணி நேரம்தான் படம். ஆனால் அதற்குள் நம்மை ஆட்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட விறுவிறு திரைக்கதை முயற்சியில் இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். மொத்த படத்திலும் சில நிமிடங்கள் தவிர்த்து மற்ற நேரம் எல்லாம் 4 பேரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் தான் இடம் பெறுகிறது. இது சலிப்பை ஏற்படுத்தினாலும் அதனை திகில் காட்சிகளை கொண்டு சரி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
அபிஜித் ராமசாமியின் பின்னணி இசையால் சில இடங்களில் படம் பார்ப்பவர்கள் ஜெர்க் ஆகிறார்கள். ஆனால் பயப்பட வேண்டிய இடத்தில் பயம் வராமல் போனது, கடைசியில் இதுதான் நடக்கும் என யூகிக்க முடியும் காட்சிகள் என சின்ன சின்ன மைனஸ் பிரச்சினைகள் இருப்பதால் ஆடியன்ஸ் உடன் இப்படம் “சிங்க்” ஆக மறுக்கிறது. இதேபோல் சிவராம் பி.கே.வின் வீடியோ கால் ஒளிப்பதிவும் வித்தியாசமாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -