Dulquer Salmaan: வாத்தி பட இயக்குநரோடு கைக்கோர்க்கும் துல்கர் சல்மான்..வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்!
தன் சொந்த மொழியான மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் பெரும் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக தன்னுடைய பான் இந்திய படத்துக்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்த்துள்ளார்.
முன்னதாக வெங்கி அட்லூரி நடிகர் தனுஷூடன் கைக்கோர்த்த ‘வாத்தி’ (தெலுங்கில் சார்) திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளார். இதுமட்டுமல்லாது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலைக் கொடுத்து, அவரை பான் இந்திய இயக்குநராக மாற்றியுள்ளது. இப்போது அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்பு, ‘சார்/வாத்தி’ படத்தைத் தயாரித்த, சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் தங்களது பேனர்களான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. மிகப் பெரிய பொருட் செலவில் துல்கர் சல்மான் நடிப்பில் இந்தப் படம் உருவாகிறது எனவும், இந்த முறையும் மிக முக்கியமான கதைக்கருவையே வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் கதையைப் பற்றி தெரிவித்துள்ள படக்குழுவினர், “ஒரு சாதாரண மனிதனின் நம்ப முடியாத உயரங்கள்’ என்று வகைப்படுத்துகின்றனர். படத்தின் அறிவிப்பின் போதே இதன் தலைப்பு ‘லக்கி பாஸ்கர்’ என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
'சார்/வாத்தி’ படத்திற்கு இசையமைத்த தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்றொரு தேசிய விருது பெற்றவரான நவின் நூலி படத்தொகுப்பை கையாள்கிறார். மேலும் கதாநாயகியாக மீனாக்ஷி சௌத்ரி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.