9 Years of VIP: ‘அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு..’ வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு!
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால்,சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், சுரபி,விவேக் என பலரும் நடித்திருந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.
ரகுவரனாக தனுஷ், கார்த்திக்காக அவர் தம்பி என அங்கேயே தொடங்கி விடும் ஏற்ற இறக்கங்கள். சீரியஸான விஷயத்தை கதையாக எடுத்தாலும் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் என மிரட்டியிருந்தார் வேல்ராஜ்.
அம்மா - மகன் சென்டிமென்ட் காட்சிகள், தனுஷ்-அமலா பால் லவ் கெமிஸ்ட்ரி, விவேக்கின் தங்க புஷ்பம் காமெடி, வில்லன்களுடன் ஃபைட் காட்சிகள் என தொடக்கம் முதல் இறுதி வரை நல்ல பொழுதுபோக்காக அமைந்தது.
இந்த படம் உண்மையில் வெற்றிப் பெற காரணம், சமூகத்தில் ஒரு படிப்பு படித்து விட்டு, ஏதோ ஒரு வேலையை பார்க்கும் பட்டாதாரிகளின் நிலையை பதிவு செய்திருந்தது தான். குறிப்பாக இன்ஜினீயரிங் படித்து விட்டு வேறு துறைகளில் பணியாற்றுவதால் கிடைக்கும் அவமானங்கள், கஷ்டத்தை படம் பிடித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்பதால் அனைவரும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் பாடல்களும் மிகப்பெரிய அளவில் உதவியது. குறிப்பாக அம்மா அம்மா பாடல் மனதை உருக வைத்தது. தனுஷ் எழுதிய பாடல் வரிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் தீம் மியூசிக், தனது தயாரிப்பு நிறுவன லோகோ வரும் போது ஒலிக்கும் அளவுக்கு தனுஷின் அடையாளமாக மாறிப்போனது.
வசூலில் நூறு கோடிக்கும் மேல் அள்ளிய வேலையில்லா பட்டதாரி தெலுங்கில் 'ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரிலும், பிரகஸ்பதி என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 வெளியானது குறிப்பிடத்தக்கது.