நன்னிலம் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன் வயது 25 .இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில்  கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். அப்போது தன்னிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓவர்சியர் மகேஸ்வரன் என்பவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒன்று மற்றும் இரண்டாம் தவணைப் பணம் பெறுவதற்கான வீட்டு வேலையை அவர் முடித்திருக்கிறார். இரண்டாவது தவணைக்கான பணம் வங்கி கணக்கில் ஏறியவுடன் அதிலும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக மகேஸ்வரன்  கேட்டதால் அதையும் மணிகண்டன் கொடுத்துள்ளார். பின்னர் மூன்றாவது தவணை பணம் ஏற்றுவதற்கான வேலையை முடித்த பின்னரும் வீட்டின் ரூப் வேலையை முடித்தால்தான் மூன்றாம் தவணை பணம் ஏற்ற முடியும் என்று ஓவர் சியர் மகேஸ்வரன் கூறியதால் தான் வெளிநாடு செல்ல வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 36 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று கம்பி வாங்கி வீட்டின் ரூப் வேலையை முடித்ததாக  தெரிகிறது. 




ரூப் வேலை முடிந்தும் மூன்றாவது தவணை பணம் ஏற்றி விடாமல் ஓவர்சியர் மகேஸ்வரன் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து லஞ்சம் வாங்கிய பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனை தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகள் 17(E) ன் கீழ் தற்காலிக பணி நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்யவும் மேலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை  நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து பேரளம் காவல் நிலையத்தில் பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்களுக்கு பொதுமக்களிடமிருந்து அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.




இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பிரதம மந்திரி பொதுமக்கள் யாரும் குடிசை வீட்டில் இருக்கக்கூடாது என்பதற்காக அனைவரும் கான்கிரீட் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது ஆனால் தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பல நபர்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள் இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்கவேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையென்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்