சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் ,கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளை திரட்டுவதற்கே   இந்து சமுத்திரத்திற்குள்  வருவதாக முன்னாள் இந்திய இராணுவத்தின்  புலனாய்வு நிபுணரான கர்ணல் ஆர்.ஹரிகரன் இலங்கை பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

 

சீனாவின் யுவான் வாங்-5  கப்பல் வரும் 11ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடையவுள்ள நிலையில், அங்கு 17ஆம் தேதி வரையில் தரித்து நிற்கவுள்ளது.இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியின் வடமேற்கில், சீனாவின் செயற்கைக்கோள்களின் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை நடத்தும்' என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

 

மேலும் சீனாவின் கப்பல் அணுசக்தி கப்பல் அல்ல எனவும் அது கண்காணிப்பு மற்றும் கடல் வழி பயணத்திற்கான கப்பல் மட்டுமே என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கர்ணல் நளின் ஹேரத் இந்திய பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

 

ஏனைய நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுவது போலவே சீனாவின் இந்த கண்காணிப்பு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

 

இந்நிலையில், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் பலம் அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ள கர்ணல் ஹரிஹரன், சீனா தனது ஆய்வுக் கப்பல்கள் மூலமாக இந்தியப் பெருங்கடலில் கடற்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக இலங்கை பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். சீனாவின் நவீன வகை ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 ஹம்பாந்தோட்டையில் ஒரு வாரத்திற்குத் தங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில், அதைச்சுற்றியுள்ள கடலை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது

 

அக்கப்பல், மறைமுகமாக அரபிக்கடல், இந்தியாவின் மேற்குக் கடற்கரைகள் மற்றும் மாலைத்தீவுகள் மற்றும் இந்தியாவின் லாக்காடிவ் தீவுகளைச் சுற்றியுள்ள கடல்களில் ஆய்வுப் பணிகளைத் தொடரவுள்ளது எனக் கூறியுள்ள கர்ணல் ஹரிஹரன்

இதன் காரணமாகவே தான்  இந்தியா தனது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

 

 


இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் எல்லைகள், குறிப்பாக மலாக்கா மற்றும் சுந்தா ஆகியவற்றின்  பகுதிகளை 24மணிநேரமும் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனகப்பல் ஆக இருந்தாலும் சரி வேறு எந்த நாட்டின் போர்க்கப்பலாக இருந்தாலும் சரி இந்துமா சமுத்திரத்தில் இந்தியாவின் கண்காணிப்பினை மீறி எதுவும் பிரவேசிக்க முடியாது என கர்ணல் ஹரிஹரன் இலங்கை பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

 

 


மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டங்களுக்கு அமைய, இந்து சமுத்திரத்திரக் கடலில் போர்க்கப்பல்களுக்கு செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை என கூறப்படுகிறது. இருந்தபோதிலும், எவ்வகையான கப்பல்களாக இருந்தாலும், எந்த நாட்டின்  கடற்பகுதிக்குள்ளும் நுழைவதற்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

 

எரிபொருள் நிரப்புவதற்கு மற்றும் பழுது பார்ப்பதற்காக போர்க்கப்பல்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் தாம் பயணிக்கும் நாட்டின் கடல் பிரதேசத்தின் அச்சத்தை தவிர்க்க முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென கர்ணல் ஹரிஹரன் வலியுறுத்தி இருக்கிறார். குறிப்பாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான  பாதுகாப்பு  நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த கப்பலின் வருகை என்பது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இதே வேளை, இந்தியாவின் அயல்நாடான இலங்கை,  பாதுகாப்பு பிரச்சினைகளை சமாளிக்க , இந்தியாவை தனது தகவல் வளையத்தில் வைத்திருப்பது கட்டாயம் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். தற்போது அரசியல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மட்டுமல்லாது  , இந்து சமுத்திர எல்லையை ஒட்டிய அனைத்து நாடுகளும்    சீனா தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ராணுவ புலனாய்வாளர் கர்ணல் ஹரிஹரன் சுட்டிக் காட்டி இருக்கிறார்.