ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலேயே உயிர்கள் வாழ தேவையான அடிப்படை அம்சங்களை கொண்ட ஒரே கோளாக கருதப்படும், பூமியின் மக்கள் தொகை நவம்பர் 15ம் தேதி 800 கோடி எனும் மைல்கல்லை எட்டும் என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடியைத் தொடுவதற்கு மொத்தம் 12 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. 900 கோடியைத் தொடுவதற்கு மேலும் 15 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2021ஆம் ஆண்டின்படி சீனாவின் கருவுறுதல் விகிதம் 1.16 ஆகும். கொரோனா தொற்றுப் பரவல் சீனாவைச் சேர்ந்த பலரது குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சீனாவில் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் வீழ்ச்சியடையும் என்றும் மக்கள்தொகை ஆய்வாளர்கள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, சீனாவின் மக்கள்தொகை அடுத்த ஆண்டு முதல் குறையத் தொடங்கும் என்றும், இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தற்போது அதிக இளைஞர்களை கொண்ட நாடாக கூறப்படும் இந்தியா, அடுத்த 20 ஆண்டுகளில் அதிக முதியவர்களை கொண்ட நாடாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2050ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா, எகிப்து, எத்தியோப்பியா, காங்கோ, பிலிப்பைன்ஸ், நைஜீரியா ஆகிய 8 நாடுகளில் தான் அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட நாடுகள், மக்களின் சுகாதாரத்தை பேணி காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இத்தகைய சூழலில் உலகின் 800கோடி ஆவது குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவில் பிறக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மணிலா நகரின் டோண்டோ பகுதியில் உள்ள டாக்டர் ஜோர் பேபெல்லா மெமோரியல் மருத்துவமனையில், 15ம் அதிகாலை ஒரு மணி 29 நிமிடங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. வின்சி மபன்சாக் என பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தையை உலகின் 800 கோடியாவது நபராக கருதி, பிலிப்பைன்ஸ் அரசு சார்பில் மருத்துவமனையில் குழந்தையை வரவேற்கும் விதமாக விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை குறைந்தாலும், பல நாடுகளில் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது. சில நாடுகளுக்கு மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்னையாக உள்ள சூழலில், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை குறைவதும் பிரச்னையாக கருதப்படுகிறது. பாலின சமத்துவம் பாதிக்கப்படுவதோடு, மனித ஆற்றலுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே, தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரையிலும் பெற, சீன அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. பிறப்பு விகித அளவை சீராக்கவே இவ்வாறு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.