கணவரின் அனுமதி இல்லாமல் உறவினரை பார்த்தால் 3 மாதம் ஜெயில்.. ஆப்கானில் பெண்களுக்கு எதிராக சட்டம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தாலிபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். அப்போது தொடங்கி பெண்களின் உரிமைகளை பறிப்பதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் மனைவியை அடித்தால் கடுமையான காயம் ஏற்படும் பட்சத்தில் 15 நாட்கள் தண்டனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தாலிபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். அப்போது தொடங்கி பெண்களின் உரிமைகளை பறிப்பதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்பட்டது. இப்படியான நிலையில் தாலிபான் அமைப்பின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா கையெழுத்திட்ட புதிய 90 பக்க குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. பெண்களும் சக மனிதர்களாக கருதப்படாமல் இச்சட்டம் மூலம் அடிமைகள் என்பதற்கு இணையாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான் சமூகம் உயர் மற்றும் கீழ் உறுப்பினர்களாகப் பிரிக்கப்படும். இதில் மதத் தலைவர்கள், முல்லாக்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள் சட்டத்திற்கு மேலே வைக்கப்பட்டு, நாட்டில் எந்த வகையான குற்றவியல் வழக்குகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த சட்டமானது கணவர்கள் தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக தண்டிக்க அனுமதி அளிக்கிறது. அவர்களுக்கு எலும்பு முறிவுகள் அல்லது வெளிப்படையான காயம் ஏற்படாத வரை அவை குற்றமாக கருதப்படாது. ஒருவேளை குறிப்பிடப்பட்டுள்ள காயம் கண்டறியப்பட்டால் அவருக்கு 15 நாட்கள் வரை மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம் குடும்ப வன்முறை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. கணவனால் ஏற்பட்ட வன்முறையை மனைவி நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியுமா இல்லையா என்பதைப் பொறுத்து சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.
பெண்கள் தங்கள் காயங்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் எனவும், அவர்களுடைய உடல் முழுமையாக மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்து அவர்களின் கணவர் அல்லது ஆண் பாதுகாவலருடன் வருவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சட்டம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் அனுமதி இல்லாமல் தங்கள் உறவினர்களைப் பார்த்தால் மூன்று மாதங்கள் வரை சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் இந்த தண்டனை சட்டம் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அரசு அங்கு வாழும் மக்களை 4 சமூகமாக பிரித்துள்ளது. அதன்படி உலமாக்கள் எனப்படும் மத அறிஞர்கள், அஷ்ரஃப் எனப்படும் உயரடுக்கு மக்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம் ஆகியவை உள்ளது. இந்த மக்களின் சமூக அந்தஸ்து மற்றும் குற்றத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு குழுக்களின் தண்டனைகள் அவர்களிடையே வேறுபடுகின்றன. பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இந்த அதிகாரப்போக்கு அந்நாட்டில் காலப்போக்கில் பெண்களை மிகவும் பலவீனமாக சித்தரிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.























