சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சக ஊழியர் தன்னை மிகவும் இறுக்கி கட்டிப்பிடித்ததற்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.
முறிந்த விலா எலும்புகள்
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனமான என்டிடிவியில் வெளியாகியுள்ள செய்தியின்படி, சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண், சக ஊழியர் தன்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்ததில் தன் மூன்று விலா எலும்புகள் முறிந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அலுவலகத்தில் அப்பெண் தனது சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆண் ஊழியர் திடீரென அவரை நெருங்கி, மிகவும் இறுக்கமாக கட்டி அணைத்துள்ளார்.
தொடர்ந்து அப்பெண் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். மேலும் தன் மார்புப் பகுதியில் அவர் பெரும் அசௌகரியத்தை உணர்ந்துள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்தும் சரியாகாத வலி, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னும் தொடர்ந்துள்ளது.
அதிகரித்த மருத்துவ செலவு
இந்நிலையில், தொடர்ந்து அப்பெண் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றியுள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாள்களிலும் அப்பெண்ணுக்கு வலி சரியாகாத நிலையில் இறுதியாக அப்பெண் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.
தொடர்ந்து எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டதில் அப்பெண்ணின் மார்புப் பகுதியில் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரிய வந்துள்ளது. வலது பக்கத்தில் இரண்டு விலா எலும்புகளும், இடது புறத்தில் ஒரு விலா எலும்பும் உடைந்திருந்ததைக் கண்டு அந்தப் பெண் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்
அதன் பிறகு அந்த பெண் வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், அப்பெண்ணுக்கு சம்பளம் பறிபோய், மருத்துவச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இச்சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிலையில், தற்போது அப்பெண் சக ஆண் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
1.17 லட்சம் இழப்பீடு
ஆனால், தன் அன்பான அரவணைப்பால் இவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என ஆண் ஊழியர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த நிலையில், விலா எலும்பு முறிவால் தனக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகள், கடுமையான வலியால் எடுத்துக் கொண்ட பணி விடுப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்க்கோரி அப்பெண் ஆண் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு ஆண் ஊழியர் 10,000 யுவான் அதாவது 1,17,383 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.