ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 


ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் உள்ள குர்கான் மற்றும் சைபீரியா காடுகளில் கடந்த ஒரு வாரமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. 


மேற்கு சைபீரியாவின் டையுமென் மாகாணத்தில் ஒரு நபர் தீயை அணைக்க முயன்றபோது பலத்த தீக்காயத்துடன் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த காட்டு தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுத்தீயில் இருந்து பெரும்பாலான இறப்புகள் சைபீரியாவிற்கு அருகில் அமைந்துள்ள குர்கன் மாகாணத்தில் நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கொடூர காட்டு தீயால் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. 


காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசரநிலை உத்தரவை பிறப்பித்து அந்த நாட்டின் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக வறண்ட கோடை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையே இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு குர்கான் மாகாணத்திற்கு சென்று பார்வையிட்ட ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர், இந்த தீயினால் குடியிருப்புகளுக்கு இனி ஆபத்து இல்லை என தெரிவித்தார். இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள் தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தன. 


கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யாவில் பெரிய அளவிலான காட்டுத் தீயால் பல சம்பவங்கள் உருவாகி வருகிறது.