White Gold Lithium: லித்தியம் உலோகத்தின் பயன்பாடு மற்றும் அதன் விலை தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்படுள்ளன.


வெள்ளை தங்கம் ”லித்தியம்”


லித்தியம் என்பது வெளிச்சம் போன்ற அல்லது வெள்ளி நிறம் கொண்ட உலோகமாகும். அதன் தோற்றம், அதிகரித்து வரும் தேவை, பல முக்கியமான குணாதிசயங்கள் மற்றும் விலை காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் 'வெள்ளை தங்கம்' என்ற புனைப்பெயரை ஈட்டியுள்ளது.


லித்தியத்தின் சிறப்பு பண்புகள் என்ன ?


அனைத்து உலோகங்களிலும் லித்தியம் மிகவும் இலகுவானது. அதன் அடர்த்தி தண்ணீரை விட சற்று அதிகம். இந்த காரணத்திற்காக, பேட்டரி உற்பத்தியில் லித்தியம் பயன்படுத்துவதன் மூலம் பேட்டரியின் எடை குறைக்கப்படுகிறது. இது தவிர, லித்தியம் மிக அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டது. இதன் பொருள் சிறிய அளவிலான லித்தியத்தில் கூட அதிக ஆற்றலைச் சேமிக்க முடியும் . கூடுதலாக, லித்தியம் மற்ற உலோகங்களை விட குறைவான வினைத்திறன் கொண்டது. அதாவது வெயில் மற்றும் மழை போன்ற வானிலை காரணங்களால் எளிதில் சேதமடையாது. மேலும் இதனை கையாளுதும் எளிதாக உள்ளது .


லித்தியத்தின் தேவை எங்கு அதிகம்?


மின்சார வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், லித்தியத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது . மேலும், எடை குறைந்த உலோகம் என்பதால் லித்தியம் அயன் பேட்டரிகள் ஸ்மார்ட்போன்கள் , மடிக்கணினிகள் , டேப்லெட்டுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்சாதனங்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது , இதன் காரணமாக லித்தியத்தின் தேவை மின்சாதன துறைகளிலும் அதிகரித்து வருகிறது. லித்தியம் அயன் பேட்டரிகள் சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைச் சேமிக்கப் பயன்படுகின்றன . புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு அதிகரித்து வருவதால், லித்தியத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது .


வெள்ளை தங்கம் என அழைக்கப்படுவது ஏன்?


லித்தியத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை தொடர்ந்து அதிகரிப்பதால்,  லித்தியம் வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இது தங்கத்தைப் போல விலைமதிப்பற்றது அல்ல. ஆனால், லித்தியம் ஒரு அரிய உலோகம் மற்றும் அதன் கிடைக்கும் தன்மை குறைவாக உள்ளது. லித்தியம் பேட்டரிகளில் மட்டுமின்றி, கண்ணாடி , பீங்கான்  மற்றும் மருத்துவம் தொடர்பான சாதனங்களின் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது.   


லித்தியத்தின் விலை என்ன?


உலக சந்தையில்  ஒரு டன் லித்தியத்தின் விலை தோராயமாக ரூ .57.36 லட்சம் ஆகும். உலக வங்கி அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் லித்தியத்தின் உலகளாவிய தேவை 500 சதவிகிதம் அதிகரிக்கும். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி லித்தியம் உற்பத்தியாளராக உள்ளது. ஆனால், உலகில் அதிக லித்தியம் கொண்ட நாடாக சிலி உள்ளது. அங்கு உப்புநீரில் இருந்து லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த பட்டியலில் சீனா மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.