Artemis II NASA: அமெரிக்காவின் ஆர்டெமிஸ் II எனும் நிலவை நோக்கி பாயும் ராக்கெட்டில் 4 மனிதர்கள் பயணிக்கின்றனர்.
விண்ணில் பாய்ந்த ஆர்டெமிஸ் II ராக்கெட்..
நிலவிற்கு மனிதனை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை கடந் 1972ம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் பயணத்தின் மூலம் அமெரிக்கா பெற்றது. ஆனால், அதன்பிறகு ஏன் அந்நாடு மனிதனை விண்வெளிக்கு அனுப்பவில்லை என்ற கேள்வி பல தசாப்தங்களாக நிலவி வருகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அடங்கி குழுவானது ஆர்டெமிஸ் II ராக்கெட் மூலம், ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் செண்டரிலிருந்து நிலவை நோக்கிய தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். நிலைந்றுத்தப்பட்ட பகுதியிலிருந்து பயணத்தை தொடங்கிய ராக்கெட்டின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் நெருப்பை கக்கி கரும்புகையை ஏற்படுத்தியவாறு ராக்கெட்டானது வானில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.54 மணியளவில் ராக்கெட் தனது பயணத்தை தொடங்கியது.
2,48,000 தூர பயணம்
சுமார் 54 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போலோ குழுவினர் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட அதே கென்னடி ஸ்பேஸ் செண்டரிலிருந்து தான், தற்போதைய ஆர்டெமிஸ் II குழுவினரும் நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். நாசாவின் வரலாற்றிலேயே மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த இந்த நிலவுப் பயணக் குழுவில், முதல் பெண், முதல் நிறவெறிக்கு ஆளானவர் மற்றும் முதல் அமெரிக்கர் அல்லாத குடிமகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ராக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஓரியன் விண்கலத்தில் 2 லட்சத்து 48 ஆயிரம் மைல்கள் அதாவது சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளனர்.
ஓரியன் விண்கலத்தில் பயணிக்கும் குழு விவரம்
கமேண்டர் ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், பணி நிபுணர் கிரிஸ்டினா கோச் மற்றும் கனடாவைச் சேர்ந்த பணி நிபுணரான ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பூமிக்கு திரும்புவதற்கு முன்பாக, நிலவை நோக்கிய 10 நாள் பயணத்தை ஓரியன் விண்கலத்தின் மூலம் மேற்கொள்கின்றனர். இந்த விணகலமானது கூடுதல் இயந்திர ஆதரவு ஏதுமின்றி, நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான பயணதிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நிகழ்த்தப்படாத பல அரிய சாதனைகளை நிகழ்த்த உள்ளது. அதன்படி,
- மனிதர்கள் இதுவரை சென்றிடாத அளவிற்கு விண்வெளியில் வெகுதூரம் பயணித்து நிலவை சுற்றி வந்து பூமிக்கு திரும்பும் சுமார் 10 நாட்கள் பயணத்தில் ஈடுப்ட உள்ளனர்
- புவியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதையை கடந்து விண்வெளியில் பயணிக்கும் முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை விக்டர் க்ளோவர் பெறுகிறார்
- இத்தகைய பயணத்தை மேற்கொள்ளும் முதல் பெண்மணி என்ற பெருமையை க்ரிஷ்டினா கோச் பெறுகிறார்
- புவியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதையை கடந்து விண்வெளியில் பயணிக்கும் முதல் அமெரிக்கர் அல்லாத நபர் என்ற பெருமையை பெறுகிறார்
ஆர்டெமிஸ் II திட்டத்தின் நோக்கம் என்ன?
மூன்று வருட பயற்சிக்குப் பிறகு ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் 4 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு பறந்துள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு நீண்டகால மனித இருப்பை உருவாக்குவதை இலக்காக வரையறுக்கப்பட்டுள்ளது. 5 தசாப்தங்களுக்குப் பிறகான நிலவை நோக்கிய இந்த பயணத்தின் மூலம், எதிர்காலத்தில் நிலவில் தரையிறகுவதற்கு அவசியமான உயிர் ஆதரவு, நேவிகேஷன் மற்றும் ஆழமான விண்வெளி தகவல் தொடர்பு அமைப்புகளை ஆர்டெமிஸ் II திட்டம் சோதிக்க உள்ளது. ஆர்டெமிஸ் II என்பது நாசாவின் நிலவை நோக்கிய பயண திட்டத்தில் ஆரம்பகால மற்றும் முக்கியமான திட்டமாகும். 2028-ஆம் ஆண்டுக்குள் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் மூலம் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவதே பிரதான இலக்காகும்.
ஆர்டெமிஸ் II பயண திட்டம் என்ன?
தரையிலிருந்து ஏவப்பட்ட ஏவப்பட்ட சுமார் மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஓரியன் விண்கலம், புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும்போது ராக்கெட்டிலிருந்து பிரிந்துவிடும். அதன் பிறகு, விண்கலத்தால் எவ்வளவு சிறப்பாக நகரவும் வழிநடத்தவும் முடியும் என்பதைச் சோதிப்பதற்காக, குழுவினர் அதன் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்வார்கள். இதன்மூலம், திட்டமிடப்பட்ட பல சோதனைகளில் முதல் சோதனை நிறைவடையும்.
ஆர்டெமிஸ் II பயணத்தின் மிகத் தொலைவான பயணப்புள்ளி என்பது ஓரியன் விண்கலமானது நிலவுக்கு அப்பால் சுமார் 4,700 மைல்கள் தொலைவிற்கு செல்வதாகும். இது, கடைசி அப்போலோ பயணத்திற்குப் பிறகு எந்தவொரு மனிதரும் பயணித்த தொலைவை விட அதிகம். மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழையும் கட்டமே மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலத்தின் வெப்பக் கவசம் பாதுகாப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திருத்தப்பட்ட பயணப்பாதையின் கீழ், ஓரியன் விண்கலம் மணிக்கு சுமார் 25,000 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குத் திரும்பும் என கூறப்படுகிறது.
