America Vs Iran: ஒருபுறம் எச்சரிக்கை; மறுபுறம் பேச்சுவார்த்தை; அமெரிக்கா-ஈரான் இடையே நடப்பது என்ன.? போர் உறுதியா.?
ஒருபுறம் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்கா ஈரான் இடையே ஓமன் தலைநகரில் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றள்ளது. அதில் விவாதிக்கப்பட்டது என்ன.? போர் பதற்றம் தணியுமா.?

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில், அமெரிக்கா ஈரான் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை ரகசியமான நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மஸ்கட்டில் அமெரிக்கா-ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாட்டு பிரதிநிதிகளும், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு குழுவும் தனித்தனியாக ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்தர் அல் புசைதியை சந்தித்துள்ளனர்.
இரு தரப்பினரும் நேருக்கு நேர் பேசுவதை தவிர்த்து, மத்தியஸ்தராக செயல்பட்ட ஓமன் வெளியுறவு அமைச்சரிடம் தகவல்களை தெரிவித்து, அவர் மூலம் விஷயங்கள் பரிமாறப்பட்டுள்ளன. அமெரிக்கா தரப்பில், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அதிபர் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பங்கேற்றுள்ளனர். ஈரான் சார்பாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி பங்கேற்றுள்ளார்.
சுமார் 14 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், யூரேனியம் செறிவூட்டல் அளவை குறைப்பது மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அணுசக்தி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்த ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
இதனிடையே, ஈரானின் அணுஆயுத திட்டம் குறித்து ஒப்பந்தம் ஏற்படாமல், பேச்சுவார்த்தை முடிவு பெறாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதொடு, அணுஆயுத திட்டம் குறித்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓமனில் தற்போது பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நியில், ஈரானுடன் அமெரிக்கா சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அடுத்த வார தொடக்கத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
இப்படிப்பட்ட சூழலில், ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான மற்றும் ரகசிய திட்டங்கள் குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் இந்த உத்தரவு, போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.























