ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சனிக்கிழமையன்று கடுமையான குமட்டல் ஏற்பட்டதையடுத்து, இரண்டு மருத்துவர் குழு அதிபர் மாளிகைக்கு விரைந்ததாகக் கூறப்படுகிறது.


ரஷிய டெலிகிராம் சேனலான ஜெனரல் எஸ்.வி.ஆரை மேற்கோள் காட்டி, இண்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் புதினுக்கு அவசர மருத்துவ சேவை தேவைபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதினின் துணை மருத்துவக் குழு, கூடுதல் மருத்துவர்களை அழைக்க நேரிட்டது.


மூன்று மணி நேரமாக புதின் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை மேம்பட்டது என்றும் செய்தி வெளியாகியுள்ளது. பின்னர்தான், மருத்துவர்கள் அவரது அறையை விட்டு வெளியேறினர்.


"ஜூலை 22 வெள்ளி முதல் ஜூலை 23 சனிக்கிழமை வரை புதினுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. அதிகாலை 1 மணியளவில், பணியில் இருந்த மருத்துவ பணியாளர்கள் அதிபர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர். கடுமையான குமட்டல் இருப்பதாக புதின் கூறியுள்ளார். இருபது நிமிடங்களுக்குப் பிறகு, அதிபர் மாளிகை மருத்துவர்களுடன் கூடுதல் மருத்துவர்கள் குழு அழைக்கப்பட்டது. 


புதினுக்கு அவர்கள் மருத்துவ உதவி வழங்கினர். மூன்று மணி நேரமாக புதினுக்கு அருகே இருந்தனர். மேலும் அதிபரின் உடல்நிலை மேம்பட்ட பிறகுதான், மருத்துவர்கள் அவரது அறையை விட்டு வெளியேறினர்" என ஜெனரல் எஸ்.வி.ஆரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இந்த டெலிகிராம் சேனலை ரஷிய வெளிநாட்டு புலனாய்வு துறையில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி வந்தவர், "விக்டர் மிகைலோவிச்" என்ற புனைப்பெயரில் நடத்தி வந்துள்ளார். வரும் வாரங்களில், புதினுக்கு பதில் அவரை போன்ற இரட்டையர் ஒருவர் கலந்து கொள்வார் என்றும் எதிர்கால நிகழ்ச்சிகளில் இதற்காக தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்படலாம் என்றும் செய்தி வெளியானது.


இதற்கிடையில், பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து, புதினுக்கு புற்றுநோய் அல்லது பார்கின்சன் நோய் இருக்கலாம் செய்தி வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு, பொது நிகழ்ச்சிகளிலும் அதிகாரப்பூர்வ சந்திப்புகளிலும் புதின் நடுங்குவது போன்றும் வழக்கத்திற்கு மாறாக அவரது கால் ஆடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின.


இருப்பினும், ரஷிய அரசு இந்த ஊகங்களை மறுத்துள்ளது. புதினின் உடல்நிலை நன்றாக இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. "உக்ரைனிய தகவல் வல்லுநர்கள், அமெரிக்க மற்றும் பிரிட்டனை சேர்ந்தவர்கள் சமீப மாதங்களாக அதிபரின் உடல்நிலை குறித்து பல்வேறு போலி செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். இவை போலியானவை தவிர வேறில்லை" என்று ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண