பிரேசிலைச் சேர்ந்த மீன்பிடி வழிகாட்டி ஒருவர் அனகோண்டா பாம்பினால் கடிபட்ட நிலையில், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். 38 வயதான ஜோவோ செவரினோ என்பவர், அனகோன்டா பாம்பு கடிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது. அதில், தண்ணீருக்குள் மறைந்திருந்த பாம்பு திடீரென சீறி வந்து அவரை கடிக்கிறது.
ஜூன் 30 அன்று மத்திய பிரேசிலில் உள்ள கோயாஸில் உள்ள அரகுவாயா ஆற்றங்கரையில் ஒரு படகில் சுற்றுலாப் பயணிகள் குழுவை செவெரினோ வழிநடத்தி அழைத்து சென்றிருந்தார். 20 வினாடி வீடியோவில், தண்ணீருக்கு கீழே, இரண்டு மரக் கட்டைகளுக்கு இடையே சுருண்டிருக்கும் அனகோண்டாவைக் காணலாம். கேமராவை அனகோண்டாவின் மீது செவெரினோ ஃபோகஸ் செய்தபோது, அது படகில் இருந்த அனைவரையும் அச்சமூட்டும் வகையில் சீறியது.
பாம்பு கடித்த பிறகு செவெரினோ பதற்றத்துடன் சிரிப்பதை வீடியோவில் கேட்கலாம். இதுகுறித்து செவெரினோ கூறுகையில், "சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி கொண்டிருந்தபோது பாம்பைப் பார்த்தேன். அப்போது, நண்பர்களே, அங்கே ஒரு அனகோண்டா இருக்கிறது. நீங்கள் பாருங்கள். நான் படமாக்கப் போகிறேன் என சுற்றுலாவாசிகளிடம் கூறினேன்" என்றார்.
கடித்துவிட்டு பாம்பு சட்டென மறைந்துவிட்டது. பாம்பு கடியானது செவெரினோவின் தோலில் ஆழமாக பதவியவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த பாம்பு 30 அடி நீளம் மற்றும் 550 பவுண்டுகள் வரை வளரும் திறன் கொண்ட பச்சை அனகோண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளது. போவா குடும்பத்தைச் சேர்ந்த தென் அமெரிக்காவின் பச்சை அனகோண்டா உலகின் மிகப்பெரிய பாம்பாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்