அமெரிக்கா மாசசூசெட்ஸ் கடற்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கிட்டத்தட்ட சுழலில் சிக்க நேர்ந்தது. இதையடுத்து, கப்பலில் சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்த வாரம் நிகழ்ந்துள்ளது. செவ்வாய்கிழமை காலை, 24 அடி கப்பல் ஒன்று அதி வேக சுழலில் சிக்கி சுற்றி கொண்டிருந்தது.
Fishing Vessel Finest Kind என்ற கப்பலின் கேப்டன் டானா பிளாக்மேன் இதை பார்த்து மார்ஷ்ஃபீல்ட் ஹார்பர்மாஸ்டர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். கப்பல் வட்டமிட்டு கொண்டிருப்பதை கவனித்த பின்னர் இரண்டு பேரை கடலில் இருந்து காப்பாற்றியதாகவும் கேப்டன் தெரிவித்தார். முன்னதாக, கடலில் சிக்கிய ஒருவர் தங்களை காப்பாற்றும்படி வெள்ளை நிற சட்டையை வெளியே நீட்டியபடி ஆட்டி கொண்டிருந்தார்.
கப்பலில் இருந்து வெளியே குதித்த இருவர் லைப் ஜாக்கெட்டை அணிந்திருக்கவில்லை என்றும் நல்வாய்ப்பாக அவர்கள் காயமடைவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கப்பல் அதிவேக வட்ட வடிவிலான சுழலில் சிக்கி மேற்கு நோக்கி கிரீன் ஹார்பர் மற்றும் பிராண்ட் ராக்கிற்கு சென்று கொண்டிருந்தது. இதன் விளைவாக கப்பலின் பாதை திடீரென மாறியது. எனவே, கடற்கரையை சிறிது நேரம் மூடி ஒரு மைல் தூரத்திற்கு பாதுகாப்பு வளையத்தை மார்ஷ்ஃபீல்ட் காவல்துறை அமைத்தது.
இதுகுறித்து காவல்துறை விரிவாக பேசுகையில், "கடலில் திடீரென எவ்வளவு விரைவாக சம்பவங்கள் நிகழலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. Finest Kindஇன் கேப்டன் மற்றும் குழுவினரின் துணிச்சல், விடாமுயற்சி, தண்ணீரில் இரண்டு நபர்களைக் கண்டறிந்து அவர்களை காப்பாற்றியதற்கு பாராட்டுகிறோம்" என்றார்.
இருவரை காப்பாற்ற உதவிய சீ டோ நிறுவனத்திற்கு பொதுமக்களுக்கும் காவல் துறை நன்றி தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்