US Snow Storm 2026: அமெரிக்காவின் பெரும்பகுதியை உலுக்கி வரும் கடும் குளிர்காலப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. நியூ மெக்ஸிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 14 கோடி மக்கள் (நாட்டின் 40% மக்கள் தொகை) கடும் பனிப்பொழிவு மற்றும் புயல் எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.
மேலும் இந்த பனிப்புயல் காரணமாக நாடு முழுவதும் 13000 விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிபர் டிரம்ப் அவசரநிலை பிரகடனம்
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அதிபர் டொனால்ட் டிரம்ப் முதற்கட்டமாக ஒரு டஜன் மாநிலங்களில் அவசரநிலையை (Emergency) அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் பல மாநிலங்களுக்கு இது விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் கிறிஸ்டி நோயம் கூறுகையில், "தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன; பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," எனத் தெரிவித்துள்ளார்.
முடங்கிய போக்குவரத்து மற்றும் மின்சாரம்
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் சுமார் 13,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓக்லஹோமா போன்ற நகரங்களில் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் தலா 50,000 என நாடு முழுவதும் சுமார் 1.20 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. பனியின் பாரம் தாங்காமல் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததே இதற்கு முக்கியக் காரணம். இந்த கடும் பனிப்பொழிவு காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை
தேசிய வானிலை சேவை (NWS) கணிப்பின்படி, திங்கட்கிழமை வரை கனத்த பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை மற்றும் உறைபனி மழை தொடரும். பனி உருகுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால், மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் அலிசன் சாண்டோரேலி எச்சரித்துள்ளார்.
