2024 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்ப இந்தியாவும் அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு தெரிவித்தார்.


இந்திய விண்வெளி வீரர்:


இந்தியாவும் அமெரிக்காவும் கிட்டத்தட்ட எல்லா விதமான தொழில்நுட்ப மற்றும் மனித வளர்ச்சியில் ஒன்றாக இணைந்து ஒத்துழைத்து முன்னேற்றத்தை கண்டு வருவதாக பிடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற புதிய நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிகளை வடிவமைப்பதில் இருந்து, 2024-ல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவது உட்பட, மனித விண்வெளிப் பயணத்தில் ஒத்துழைப்பது வரை என அனைத்து துறையிலும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்  என்று ஜோ பிடன் மோடியுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 


ஜூன் 21 ஆம் தேதி பிரதமர் மோடி 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் நாள் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஐ.நா வில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜோ பிடன் அரசு முறைப்படி வரவேற்றார். பின் பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய விஷயங்களையும், இரு நாட்டுக்குமான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசினார்.






சர்வசேத விண்வெளி நிலையம்:


அதனை தொடர்ந்து நடைபற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடுத்த ஆண்டு இந்திய விண்வெளி வீரரை அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனர்.  "சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு கூட்டு விண்வெளிப் பயண ஒரு திட்டம் உள்ளது, முதலில் இந்திய விண்வெளி வீரருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் 2024 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்" என குரூப் கேப்டன் அஜய் லெலே (ஓய்வு) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 


"ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைய முடிவு செய்துள்ளது. நாம் விண்வெளி துறையில் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவுடனான ஒத்துழைப்புக்கு எல்லையே கிடையாது" என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா தனது முதல் மனித விண்வெளி விமானமான ககன்யானை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தால், அது ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.