ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா ஆதரவு அளித்து வருவதாகவும், மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் எனப் பெய்ஜிங் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், மிக முக்கியமான இந்த கப்பல் போக்குவரத்துப் பாதையை "நிரந்தரமாக" திறந்து வைக்கும் தனது முடிவில் சீனா "மிகவும் மகிழ்ச்சியாக" உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கும் பயனளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனா - ஈரான் உறவு
"ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்... நாங்கள் புத்திசாலித்தனமாகவும் மிகச் சிறப்பாகவும் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என்று டிரம்ப் எழுதியுள்ளார். இது வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே நிலவும் நெருக்கமான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை வரவேற்பார் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஒத்துழைப்புடன் இருப்பதாகக் காட்டியுள்ளார். ஈரான் மோதல் முடிவுக்கு வருவதையே ஷி ஜின்பிங் விரும்புவதாக டிரம்ப் நேற்று கூறியிருந்த நிலையில், தற்போது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம் சீனாவிற்கு முக்கியப் பயணம்
சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் டிரம்ப் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஈரான் மோதல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் பயணம், தற்போது பல முனைப் பதற்றங்களுக்கு மத்தியில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
டிரம்ப் - ஷி ஜின்பிங் இடையிலான இந்த சந்திப்பில் வர்த்தக மோதல்கள், வரி விதிப்புகள், உலகளாவிய விநியோகச் சங்கிலி, தைவான் விவகாரம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. போரின் போது ஈரான் நாட்டுக்குச் சீனா ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் "பெரிய சிக்கல்களுக்கு" வழிவகுக்கும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு அரங்கேறுகிறது.
ஹார்முஸில் சீனாவின் பிளான்:
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், அதன் கச்சா எண்ணெயை வாங்கும் முக்கிய நாடாகவும் சீனா விளங்கி வருகிறது. எரிசக்தி விநியோகத்திற்காக ஈரானில் முதலீடு செய்வது உள்ளிட்ட நீண்டகால ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை இரு நாடுகளும் கொண்டுள்ளன. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையின் ஸ்திரத்தன்மை சீனாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது.
அந்த நீரிணையில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் சீனாவின் இறக்குமதி மற்றும் வர்த்தகப் பாதைகளைப் பெருமளவு பாதிக்கும். அமெரிக்கக் கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து சீனா நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று திரும்பியதாகக் கூறப்படும் தகவல், கப்பல் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் சீனா, அதே சமயம் ஈரானுடன் பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து உறவை பேணி வருகிறது. இந்த பிராந்தியத்தில் ஏற்படும் உறுதியற்ற நிலை உலகச் சந்தையைப் பாதிப்பதோடு பணவீக்கத்தையும் அதிகரிக்கும் எனச் சீன அதிகாரிகள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
