Iran War Fuel Crisis: கடும் எரிபொருள் தட்டுப்பாடு; ‘Work from Home‘ உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு; எங்கெங்க தெரியுமா.?
தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் இந்தியாவின் அண்டை நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அலுவலக நேரம் குறைப்பு, வீட்டில் இருந்து பணி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால், உலகின் பல்வேறு நாடுகளும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை, வீட்டிலிருந்து பணி உள்ளிட்டவைகளும் அடங்கும்.
அமெரிக்க ஈரான் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் அண்டை நாடுகள்
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுப்படைகள் தாக்குதல்களை தொடங்கின. இதையடுத்து, ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ராணுவ தளங்களை வழங்கி உதவிவரும் கத்தார், குவைத், துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்குள்ள எண்ணெய் வளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், உலகின் 20 சதவித கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது ஈரான். அந்த வழியாக செல்லும் எதிர் நாட்டு கப்பல்கள் தாக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அவ்வழியாக செல்லும் கப்பல்கள், அச்சத்தின் காரணமாக செல்லவில்லை. எனினும், இந்தியா உள்பட சில நாடுகளுக்கு மட்டும் தளர்வளித்தது ஈரான்.
ஆனாலும், வளைகுடா நாடுகள் தாக்கப்பட்டதால், அங்கிருந்து பெரும் அளவில் எரிபொருளை பெறும் நமது இந்தியா உள்பட இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனினும், இந்தியா ஈரானுடன் சிறந்த நட்பை பேணி வருவதால், இந்திய கப்பல்கள் விடுவிக்கப்பட்டதுடன், இந்தியாவும் போதிய கையிருப்பை வைத்துள்ளதால், எரிபொருள் பிரச்னை பெரிய அளவில் இல்லாமல் சமாளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மற்ற நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லாததால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் என்னென்ன கட்டுப்பாடுகள்.?
பாகிஸ்தானை பொறுத்தவரை, கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 137 ரூபாயிலிருந்து 458 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். அதைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 80 ரூபாயை குறைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்தார். அதனால், தற்போது அங்கு பெட்ரோலின் விலை 378 ரூபாயாக உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே செல்படும் என்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ‘Work From Home‘
இதேபோல், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், அரசு அலுவலகங்களில் ஏசி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்தே பணிபுரியும், அதாவது Work From Home திட்டத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசம், நேபாளில் வாரம் 2 நாட்கள் கட்டாய விடுமுறை
இந்தி சூழலில், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசுகள் விதித்துள்ளன. வங்கதேசத்தில் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கவிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
இதேபோல், நேபாளத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட, மற்ற வார நாட்களில், வேலை நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க, சட்டப்பூர்வமான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















