அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் முடக்கும் விதமாக, அப்பகுதியை முற்றுகையிட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தங்கள் கப்பல்களின் போக்குவரத்தில் தலையிட வேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை தோல்வி

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முதல், அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் 2 வார போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்றது.

இதில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்படும் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்கா திரும்பி, ட்ரம்ப்பிடம் பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளித்தார்.

ஹார்முஸ் முற்றுகையை அறிவித்த ட்ரம்ப்

இதைத் தொடர்ந்து, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன்படி, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களையும், அமெரிக்காவின் கடற்படை தடுத்து நிறுத்தும் என அறிவித்தார்.

அதோடு, அவரது அறிவிப்பின்படி, அப்பகுதியில் நேற்று முதல் முற்றுகை தொடங்கியது. அதை தடுக்க முயலும் ஈரானிய கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.

அமெரிக்காவை எச்சரித்த சீனா 

இந்த சூழலில், ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது சீனா. அமெரிக்கா அறிவித்த கடற்படை முற்றுகைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, தங்களின் கப்பல்களின் போக்குவரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் தங்களது கப்பல்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்து சீனா.

அதோடு, ஈரான் உடனான பரிசக்தி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை சீனா தொடர்ந்து மதிக்கும் என்றும், தங்கள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருப்பதாகவும், இது இருதரப்பின் உள்நாட்டு விவகாரம், அதில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜுன் எச்சரித்துள்ளார்.

சீனாவிற்கு இது ஏன் முக்கியம்.?

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் சீனா கொந்தளிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஏனென்றால், சீனாவின் எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 40 சதவீதமும், இயற்கை எரிவாயு தேவையில் 30 சதவீதமும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெற்று வருகிறது.

அதனால், அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கை, சீனாவின் பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்துவிடும். அதனால் தான், இந்த போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளதோடு, அழுத்தமும் கொடுத்து வருகிறது.