அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள், சரியான பாதையில் முன்னேறுவதற்கு பதிலாக, மேலும் சிக்கலாகி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கான புதிய முன்மொழிவை ஈரான் அனுப்பிய சில மணி நேரங்களில், ஈரான் மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேரடியாக பதிலளிக்கவில்லை. அமெரிக்கா மீண்டும் ஈரானை தாக்குமா என்று வாஷிங்டனில் உள்ள செய்தியாளர்கள் ட்ரம்பிடம் கேட்டபோது, ​​அவர் நேரடியான பதில் அளிக்க மறுத்துவிட்டார். "நான் ஏன் அதை உங்களிடம் சொல்ல வேண்டும்?" என்று கேட்டதோடு, சட்டென சந்திப்பை முடித்துக் கொண்டார்.

ஈரானின் முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்

ஈரானின் புதிய பேச்சுவார்த்தை முன்மொழிவில் தனக்குத் திருப்தி இல்லை என்று ட்ரம்ப் ஏற்கனவே தெளிவாக கூறியிருந்தார். ஈரானிய தலைமைக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளே பேச்சுவார்த்தைகள் முன்னேறுவதை தடுக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தாலும், அவை சீராக இல்லை என்று அவர் கூறியுள்ளார். சில சமயங்களில் முன்னேற்றம் காணப்பட்டது, சில சமயங்களில் புதிய நபர்கள் வந்து நிலைமையை மாற்றினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள் உள்ளன என்று ட்ரம்ப் கூறினார்: ஒன்று முழு பலத்துடன் நடவடிக்கை எடுப்பது அல்லது ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பது. இருப்பினும், அவர் முதல் அணுகுமுறையை எடுக்க விரும்பவில்லை என்றும், அதாவது நேரடியான, பெரிய நடவடிக்கைகளை தவிர்ப்பார் என்றும் கூறினார். ஈரான் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். ஆனால், அந்த கோரிக்கைகள் என்னவென்று அவர் குறிப்பிடவில்லை.

மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம்

இதற்கிடையே, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான தனது பிடியை ஈரான் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே சமயம், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்கான முற்றுகையை தொர்கிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போரில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரானில் 3,375-க்கும் மேற்பட்டோரும், லெபனானில் 2,600-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இஸ்ரேலில் 24 பேரும், வளைகுடா நாடுகளில் 20-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். லெபனானில் 17 இஸ்ரேலிய வீரர்களும், இப்பகுதி முழுவதும் 13 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.