கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 5 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.


இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலையும் காசா:


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இஸ்ரேல் மீது கடுமையான போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு மனித உரிமை மீறலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.


பாலஸ்தீன பகுதியான வெஸ்ட் பேங் மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. இதை கடுமையாக கண்டித்துள்ள ஐநா, போர் குற்றத்திற்கு இணையான செயலை இஸ்ரேல் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. 


கடந்த 2022ஆம் ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வெஸ்ட் பேங்கில் ஏற்கனவே இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


வெளுத்து வாங்கிய ஐநா:


கடந்த 2017ஆம் ஆண்டு, வெஸ்ட் பேங்கில் ஐநா மனித உரிமை அலுவலகம் கண்காணிப்பை தொடங்கியதில் இருந்து இந்தாண்டுதான் அதிகபட்ச ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களாகவே, புதிய கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்புகளை அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.


இதுகுறித்து ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறுகையில், "வெஸ்ட் பேங் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. இருப்பினும்கூட, இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைகளும் குடியேற்றம் தொடர்பான மீறல்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளன. பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளை இது ஆபத்தாக்குகிறது.


மூன்று பகுதிகளில் சர்வதேச விதிகளை மீறி 3,500 வீடிகளை கட்டி அதில் இஸ்ரேலியர்களை குடியற்ற இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதும் விரிவாக்கம் செய்வதும் இஸ்ரேல் தங்களின் சொந்த மக்களை அங்கு கொண்டு வருவதும் சர்வதேச விதிகளின் போர் குற்ற செயலாகும்" என்றார். ஐநா மனித உரிமைகள் சபையில் இந்த அறிக்கையை அதன் தலைவர் வோல்கர் டர்க் நேற்று சமர்பித்தார்.


ஏற்கனவே, போரால் நிலைகுலைந்துள்ள காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்தது. குறிப்பாக, உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், "எதுவும் மாறவில்லை என்றால் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படுவது நிச்சயம்" என்றார்.