UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு
UN Job Cuts: ஐக்கிய நாடுகள் சபை நிதிபற்றாக்குறை காரணமாக 7 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UN Job Cuts: ஐக்கிய நாடுகள் சபைக்கான நிதி பங்களிப்பை நிறுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கையால் இந்த பணிநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை - பணி நீக்கம்:
ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஐக்கிய நாடுகள் சபை தனது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பட்ஜெட்டை 20 சதவிகிதம் அளவிற்கு குறைக்க, 6 ஆயிரத்து 900 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாம். பணிநீக்கம் செய்ய வேண்டிய விவரங்களை வரும் ஜுன் 13ம் தேதிக்குள் சமர்பிக்க, செயலகத்திற்கு உயர்மட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான ஓராண்டுக்கான வருவாயில் நான்கில் ஒரு பங்கை அமெரிக்க தான் வழங்கிக் கொண்டு இருந்தது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் அந்த நிதியுதவியை நிறுத்தியதால், ஐக்கிய நாடுகள் சபை நிதி சிக்கலில் சிக்கியுள்ளது.
நிதிச்சிக்கலில் ஐநா சபை:
டிரம்பின் நிர்வாகம் வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியதால் ஐ.நா. மனிதாபிமான நிறுவனங்களுக்கான நிதியுதவிகளூம் முடங்கியுள்ளன. நடப்பாண்டில் மட்டுமே மெரிக்கா வழங்கவேண்டிய கிட்டத்தட்ட $1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிலுவையில் உள்ளதாம். சீனாவும் தனத் பங்களிப்பை தாமதப்படுத்தியுள்ளதாம். இந்த இரண்டு நாடுகள் மட்டுமே, ஐ.நா.வின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் பங்களிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இந்த பணி நீக்க நடவடிக்கையை ஐ.நா. கட்டுப்பாட்டாளர் சந்திரமௌலி ராமநாதன், அமெரிக்கா பணம் செலுத்தத் தவறியதால் மேற்கொள்கிறோம் என குறிப்பிடாமல், "UN80" என்று அழைக்கப்படும் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
செலவினம் குறைப்பு எப்படி?
அடுத்த நிதியாண்டு அமலுக்கு வரும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த பணி நீக்க நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. செலவினங்களை குறைப்பது குறித்து அண்மையில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டாரெஸ், “ முக்கிய துறைகளை ஒன்றிணைத்து உலகம் முழுவதும் பணியாளர்களை மாற்றும் ஒரு பெரிய மாற்றத்தை பரிசீலித்து வருகிறோம். ஐ.நா. சில நிறுவனங்களை ஒருங்கிணைக்கலாம், மற்றவற்றைக் குறைக்கலாம், ஊழியர்களை மலிவான நகரங்களுக்கு மாற்றலாம் மற்றும் தேவையற்ற அதிகாரத்துவத்தை அகற்றலாம். சங்கடமான மற்றும் கடினமான முடிவுகள் நமக்கு எதிரே உள்ளன. அவற்றைப் புறக்கணிப்பது எளிதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கலாம். ஆனால் அந்தப் பாதை ஒரு முட்டுச்சந்தகாவே இருக்கும்” என பேசியுள்ளார். இதுபோக, நிதிப்பற்றாக்குறையால் உலகளாவிய பல மனிதாபிமான நடவடிக்கைகளை கூட ஐக்கிய நாடுகள் சபை நிறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயல்பாடு:
உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க 193 உறுப்பு நாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், நிலையான வளர்ச்சியை ஆதரித்தல் மற்றும் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்துகிறது. பாதுகாப்பு கவுன்சில், பொதுச் சபை, சர்வதேச நீதிமன்றம் மற்றும் செயலகம் உள்ளிட்ட ஐ.நாவின் அமைப்புகள் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட பணிகள் முன்னெடுக்கப்டுகின்றன. இந்த நிறுவனத்தில் சர்வதேச அளவில் சுமார் 37 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.





















