பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
Epstein Scandal UK PM: எப்ஸ்டீன் ஃபைல்ஸ் சர்ச்சையால் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ய அழுத்தம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Epstein Scandal UK PM: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தால், நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமராக சபானா மஸ்மூத் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்?
இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் மன்டெல்சன் என்பவரை அமெரிக்காவின் தூதராக, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நியமித்து இருந்தார். ஆனால், அண்மையில் வெளியான எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகளில் பல இடங்களில் பீட்டரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததால், உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நெருக்கமாக இருந்த ஒருவரை உயர் பதவியில் நியமித்தற்காக, கெய்ர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சர்சையால் அரசின் தலைமை அதிகாரியும், நெருங்கிய ஆதரவாளருமான மோர்கன் மெக்ஸ்வீனி ராஜினாமா செய்ததார். அதை தொடர்ந்து, பிரதமரின் தகவல் தொடர்புத் தலைவர் டிம் ஆலனும் வெளியேறியதன் மூலம், ஸ்டார்மர் மீதான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்தின் முதல் இஸ்லாமிய பிரதமர்?
சர்ச்சைகள் தணிவதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், ஸ்டார்மர் வேறு வழியின்றி ராஜினாமா செய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அவரது பதவிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பரிசீலனை பட்டியலில் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்தின் பெயர் முதலிடத்தில் உள்ளதாம். ஒருவேளை அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டால், மஹ்மூத் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தின் முதல் பிரதமராகவும், அந்தப் பதவியை வகிக்கும் முதல் இஸ்லாமிய பெண்ணாகவும் வரலாற்றைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த ஷபானா மஹ்மூத்?
கடந்த 2010ம் ஆண்டு முதல் பர்மிங்காம் லேடிவுட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மஹ்மூத், தொழிலாளர் கட்சியின் மிகவும் திறமையான மற்றும் அரசியல் ரீதியாக கூர்மையான நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பயிற்சி பெற்ற வழக்கறிஞரான அவர், தொழிலாளர் கட்சியின் முதல் இஸ்லாமிய பெண் எம்.பி.க்களில் ஒருவராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி தலைவர்கள் பட்டியலில் விரைவாக உயர்ந்து, தனது நாடாளுமன்ற வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நிழல் அமைச்சரவையில் (எதிர்க்கட்சிகள் சார்பில் குறிப்பிட்ட துறைகளை கவனித்து குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு) ஒரு இடத்தையும் பிடித்தார்.
பல ஆண்டுகளாக நீதி மற்றும் கல்வி உட்பட பல துறைகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார். தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 2025 இல் உள்துறைச் செயலாளராக மஹ்மூத் நியமிக்கப்பட்டார். அரசின் பல்வேறு முக்கிய துறைகளை உள்ளடக்கியுள்ள இந்த துறையின்கீழ், காவல், தேசிய பாதுகாப்பு, குடியேற்றம் மற்றும் பொது ஒழுங்கு போன்றவை மேற்பார்வையிடப்படுகிறது.
பாகிஸ்தான் வம்சாவளியான ஷபானா மஹ்மூத்..
பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிய பெற்றோருக்கு பர்மிங்காமில் பிறந்த மஹ்மூத், தனது பிரிட்டிஷ் இஸ்லாமிய அடையாளம், தொழிலாள வர்க்க வளர்ப்பு மற்றும் தனது அரசியல் பயணத்தை வடிவமைப்பதில் கல்வி வகித்த முக்கிய பங்கு குறித்து அடிக்கடி பேசியுள்ளார். இருப்பினும், அண்மைக்காலமாக குடியேற்றம் குறித்து குறிப்பிடத்தக்க வகையில் அவர் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























