2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தவதற்காக, கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எனும் இயற்பெயரைக் கொண்ட, போப் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்றைய தினம் இயேசு உயிர்த்தெழுந்ததாக கூறப்படும் நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், இன்று போப் மறைவானது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த போப், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து உடல்நிலை சற்று சீரானதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு இல்லம் திரும்பினார். இதையடுத்து, மக்களை சந்தித்த போப் பிரான்சிஸ், ஆசி வழங்கினார். இந்நிலையில் நேற்றைய தினம் ஈஸ்டர் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தருணத்தில் இன்று காலை, இந்திய நேரப்படி சுமார் 11.05 மணி அளவில் உயிரிழந்தார் வாட்டிகன் தெரிவித்துள்ளது.  போப் பிரான்சிஸ் மறைவு குறித்த செய்தியை கர்தினால் Kevin Joseph Farrell  பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார். திருத்தந்தை , தனது வாழ்க்கை முழுவதையும் இறைப்பணிக்காகவும் திருஅவையின் பணிக்காகவும் அர்ப்பணித்தவர். நற்செய்தியின் விழுமியங்களை துணிவுடனும் நம்பிக்கையுடனும், உலகளாவிய அன்புடனும் எடுத்துரைத்தவர்.

விஜய் இரங்கல் குறிப்பு:

தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாவது, கடவுளாகிய இயேசுவின் உண்மைச் சீடராக சிறந்த முன்மாதிரிகையாகத் திகழ்ந்தவர். கடவுளின் எல்லையற்ற இறை இரக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை அர்ப்பணித்து செபிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், விஜய் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “ உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
 
அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலின்:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நபரான போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
 
அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தார். அவர் போப்பாண்டவருக்கு பணிவு, தார்மீக தைரியம் மற்றும் ஆழ்ந்த பச்சாதாப உணர்வைக் கொண்டு வந்தார். ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.
அவர் நம்மிடம் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை விட்டுச் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். 
 
சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு,  நம்பிக்கை உணர்வைத் தூண்டினார். 
 
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன், மேலும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்:

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளதவாது, புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற செய்தியால் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.