துருக்கி - சிரியாவை உலுக்கி ரிக்டர் அளவில் 7.8 அளவில் பதிவான நிலநடுக்கம் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான மிக மோசமான நிலநடுக்கம் என நில அதிர்வு நிபுணர்கள் கூறுகின்றனர். அனடோலியன் மற்றும் அரேபிய தட்டுகளுக்கு இடையில் 100 கிமீ (62 மைல்) க்கும் அதிகமான தொலைவில் நிலத்தில் பிளவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.


பூமியின் மேற்பரப்பின் மேல் என்ன நடந்தது, இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதை, கீழே பார்ப்போம்.


நிலநடுக்கம் எங்கு மையம் கொண்டது..?


துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு திசையில் நில அதிர்வு ஏற்பட்டு மத்திய துருக்கி மற்றும் சிரியாவை நில நடுக்கம் உலுக்கியது.


இதுகுறித்து பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு நிறுவனத்தில் கௌரவ ஆராய்ச்சி துணையாக பணியாற்றி வரும் ரோஜர் முசன் கூறுகையில், "20ஆம் நூற்றாண்டின் போது, ​​கிழக்கு அனடோலியன் ஃபால்ட் பகுதியால் சில பெரிய நில அதிர்வுகள் ஏற்பட்டது. அது பெரிய நிலநடுக்கம் என்று மட்டும் எடுத்து கொண்டால் அது வெறுமையாகவே தோன்றும்.


அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, 1970 முதல் மூன்று பூகம்பங்கள் மட்டுமே ரிக்டர் அளவுகோலில் 6.0 க்கு மேல் பதிவாகியுள்ளன. ஆனால், 1822 இல், 7.0 நிலநடுக்கம் இப்பகுதியைத் தாக்கியது. இதில், 20,000 பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது" என்றார்.


எவ்வளவு மோசமான நிலநடுக்கம் இது..?


சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 7.0 ரிக்டர் அளவில் 20க்கும் குறைவான நிலநடுக்கங்களே ஏற்படுகின்றன. இதுகுறித்து விவரித்த இடர் மற்றும் பேரிடர் குறைப்புக்கான லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் ஜோனா ஃபாரே வாக்கர் கூறுகையில், "2016 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியைத் தாக்கி சுமார் 300 பேர் உயிரிழப்புக்கு காரணமான 6.2 நிலநடுக்கத்துடன் ஒப்பிடும்போது, ​​துருக்கி-சிரியா பூகம்பம் 250 மடங்கு அதிக ஆற்றலை வெளியிட்டது. 2013 முதல் 2022 வரை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் இரண்டு மட்டுமே திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் அளவைக் கொண்டிருந்தன" என்றார்.


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில்  நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிவாரண பொருள்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையின் தேடுதல் வீரர்களையும் மருத்துவர்களையும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.