Trump Iran War: ஹார்மஸ் நீர்வழிப்பாதையை பாதுகாக்க நட்பு நாடுகள் உதவ வேண்டும் என, அமெரிக்க அதிபர் டரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவு
ஈரான் மீதான தாக்குதலை தொடங்கி ஒரு மாதம் நிறைவானது தொடர்பாக, அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் ஈரானின் செயல்திறனை மிகவும் பலவீனமாக்கியுள்ளதோடு, தங்களது இலக்கையும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். போரில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பேசியபோது, அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு அமெரிக்க ராணுவம் தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்தும், ஆற்றல் உட்கட்டமைப்புகள் உள்ளிட்டவை மீதும் மிகவும் தீவிரமான தாக்குதல்களை நடத்தும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மஸ் நீர்வழியை பாதுகாக்க, நட்பு நாடுகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
”வான், கடற்படையை காலியாகிவிட்டது”
தொடர்ந்து பேசுகையில், ”ஈரானின் கடற்படை மற்றும் வான்படை ஆகியவை முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ராணுவ தலைமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளோம். குறிப்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பெரிய அளவில் பலவீனமாக்கியுள்ளோம். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் திறனை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளோம். ஆயுதக்கிடங்கு மற்றும் ஏவுகணை அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன” என ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா போரில் வெற்றி பெற்றுள்ளதாகவும், எதிரிகள் பலவீனமடைந்துவிட்டதாகவும் பேசியுள்ளார்.
”இலக்கை நெருங்கியுள்ளோம்”
அமெரிக்கா தனது எல்லைகளை தாண்டி செயல்படுத்தும் நலன் மற்றும் ஆற்றல் திட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடிய ஈரானின் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மிக முக்கிய இலக்குகளை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாகவும், இந்த ராணுவ நடவடிக்கையை விரைவில் சுமூகமாக முடிக்க உள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும், “இந்த மோதலில் இருந்து தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து செய்யும். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பிற்காக ஈரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை மிகவும் அவசியம். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை அனுமதிக்க முடியாது. அது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறக்கூடும்” என ட்ரம்ப் பேசியுள்ளார்.
விரைவில் முடிவுக்கு வரும் போர்..
மேலும், “போரை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கிறோம். இந்தப் பணியை மிக வேகமாக முடிப்போம். இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு நட்பு நாடுகள் போரில் பாதிக்கப்படவோ அல்லது தோல்வியடையவோ அனுமதிக்க மாட்டேன். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பதற்றம் மேலும் அதிகரிக்கும். அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் ஈரானை கற்காலத்திற்கே அவர்களை திரும்பக் கொண்டு செல்வோம். அமெரிக்கப் படைகள் தங்களின் அனைத்துப் போர்க்கள இலக்குகளையும் மிக மிக விரைவில் அடையும் . எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா ஈரானின் மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கக்கூடும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
