ஈரானில், காமேனி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, அந்நாட்டு அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா வரும் என்றும், தாக்குதல் நடத்த தயாரான நிலையில் இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
ஈரானில் நடக்கும் போராட்டம் தொடர்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதியான முறையில் போராடுபவர்களை ஈரான் அரசு அவர்களின் வழக்கப்படி சுட்டுக் கொன்றால், அவர்களை மீட்க அமெரிக்கா வரும். நாங்கள் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருக்கிறோம்“ என, குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை கையிலெடுத்தால், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயங்காது என்பதையே ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை காட்டுகிறது.
சரிந்த ஈரானின் பொருளாதாரம்
ஈரானில், ஏற்கனவே பல தசாப்தங்களாக மேற்கத்திய தடைகளால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், செப்டம்பர் மாத இறுதியில், ஐக்கிய நாடுகள் சபை 10 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட நாட்டின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச தடைகளை மீண்டும் விதித்ததைத் தொடர்ந்து, மேலும் நெருக்கடிக்குள்ளானது.
இதனால், டிசம்பர் மாதத்தில், பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு 52 சதவீதமாக இருந்தது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டாலருக்கும், பிற உலக நாணயங்களுக்கும் எதிராக ஈரானிய ரியால் மதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தபோது, அமெரிக்க டாலர் சுமார் 1.42 மில்லியன் ரியால்களாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு, 8,20,000 ரியால்களாக இருந்தது.
வெடித்த போராட்டங்கள்
இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தில் குதித்துள்ள பல்கலைக்கழகங்களில், நாட்டின் மிகவும் மதிப்புமிக்க தெஹ்ரானில் உள்ள 7 பல்கலைக்கழகங்களும் அடங்கும்.
இந்த போராட்டங்களில், அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஈரான் முழுதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லோரெஸ்தான், கோம் போன்ற பகுதிகளில், பாதுகாப்பு படையினருக்கும், பேராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மிகப் பெரிய அளவில் வெடித்துள்ள போராட்டங்களை தடுக்க, ஒருசில பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்புக்கு ஈரான் பதிலடி
இந்நிலையில் தான், போராடுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குரல் கொடுத்துள்ளார். ஆனால், இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் அதிபர் மசூத், தங்களின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஈரானில் போராட்டங்களை துாண்டி விடுவது, அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் எனவும், ஈரானின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நலன்கள் மற்றும் அதன் வீரர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான அலி லாரிஜானி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தற்போது ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அணுசக்தி திட்டம் தொடர்பாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது. இதனால், ஒருவேளை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.