சீனா மீது நவம்பர் 1-ம் தேதி முதல் தற்போது உள்ள வரிகளுடன் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், முக்கியமான மென்பொருள் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்போம் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். எதற்காக இந்த திடீர் மிரட்டல்.? சீனா என்ன செய்தது.? அது குறித்த ட்ரம்ப்பின் பதிவு என்ன.? இப்போது பார்க்கலாம்.

Continues below advertisement

சீனாவை மிரட்டும் ட்ரம்ப்பின் பதிவு என்ன.?

இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு பெரிய பதிவை போட்டுள்ள ட்ரம்ப், “நவம்பர் 1, 2025 முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றை அவர்களால் தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.

“இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. மேலும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது. மேலும், பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம்.“ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மேலும், “சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதன் அடிப்படையில், நவம்பர் 1, 2025 முதல் (அல்லது விரைவில், சீனாவால் எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து) இதேபோல் அச்சுறுத்தப்பட்ட பிற நாடுகளுக்காக அல்ல, அமெரிக்காவிற்காக மட்டுமே பேசுகிறது. அமெரிக்கா, தற்போது செலுத்தும் எந்தவொரு கட்டணத்திற்கும் மேலாக, சீனா மீது 100% வரியை விதிக்கும். மேலும், நவம்பர் 1-ம் தேதி, எந்தவொரு மற்றும் அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம்“ எனவும் ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

“சீனா இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நம்புவது சாத்தியமில்லை. ஆனால் அவர்கள் எடுத்திருக்கிறார்கள். மற்றதெல்லாம் வரலாறு. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!“ என ட்ரம்ப் தனது பதிவை முடித்துள்ளார்.

ஏற்கனவே சீனாவிற்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் அந்த வரி 130 சதவீதமாக அதிகரிக்கும்.

அமெரிக்கா-சீனா இடையே ஏற்கனவே இருந்த வர்த்தகப் போர்

முன்னதாக, ட்ரம்ப் பதவியேற்ற பின் பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்த நிலையில், சீனா மீது கடுமையான வரிகளை விதித்தார். சீனாவும் பதிலுக்கு அமெரிக்கா மீது வரிகளை விதித்த நிலையில், இரு நாடுகளின் வரியும் 100 சதவீதத்தை தாண்டிச் சென்றன.

இந்நிலையில், இந்த வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. அதன் முடிவில், சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இதையடுத்து, சீனா மீதான வரிசை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைத்தது அமெரிக்கா.

இந்த நிலையில் தான், நோபல் பரிசு கிடைக்காத கோபத்தில் இருக்கும் ட்ரம்ப், சீனா மீது கூடுதல் வரி விதிப்பதாக  அறிவித்துள்ளார். இதற்கு சீனா என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.