ரஷ்ய அதிபர் புதின் குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் போரை தொடர்ந்துவரும் புதினின் செயல் தனக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வாரத்தில் ஜெயித்திருக்க வேண்டிய போரை எதற்காக இப்படி இழுக்கிறார் என்று தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

புதின் குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

வெள்ளை மாளிகையில் அர்ஜென்டினா அதிபருடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் ட்ரம்ப். அப்போது, ரஷ்ய அதிபர் புதினுக்கு தனக்கும் மிகுந்த நட்புறவு இருந்ததாகவும், இன்னும் இருப்பதாகவும், அதனால், அவரது செயல் தனக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் ட்ரம்ப் கூறினார்.

இந்த போரை(உக்ரைன்) அவர் ஏன் தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும், அவருக்கு இந்த போர் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஒரு வாரத்தில் அவர் ஜெயித்திருக்க வேண்டும், ஆனால் 4 வருடங்களாக போரை தொடர்ந்து வருகிறார் என்றும் இந்த பயங்கர போரில் அவர் 15 லட்சம் ராணுவ வீரர்களை இழந்துவிட்டார் என்றும் வேதனை தெரிவித்தார் ட்ரம்ப்.

Continues below advertisement

இரண்டாம் உலகப் போருக்கு அடுத்தபடியாக இதுதான் அதிக இழப்பை சந்தித்துள்ள போர் என்றும் கூறினார் ட்ரம்ப். வரும் வெள்ளிக்கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ள நிலையில், அவர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவு குறித்தும், இன்னும் செய்யவேண்டியவை குறித்தும் இருவரும் பேச உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார் ட்ரம்ப். ஆனாலும், அந்த பேச்சுவார்த்தையில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தும் ட்ரம்ப்பின் தீவிர முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. அதிலிருந்து புதின் மீது கோபமாகத்தான் உள்ளார் ட்ரம்ப்.

மேலும், அப்போது முதல் உக்ரைனுக்கான தனது உதவிகளை அதிகரித்துள்ளார் ட்ரம்ப். சமீபத்தில், உக்ரைனுக்கு  மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் டோமோஹாக் ஏவுகணைகளை வழங்கவும் ட்ரம்ப் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது. அப்படி நிகழும் பட்சத்தில், இந்த போர் தீவிரமடையவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஒருபுறம் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், மறுபுயம் போருக்கான செயல்பாடுகளும் நடந்தே வருகின்றன.  இதனிடையே, ரஷ்யாவை தனிமைப்படுத்தும் ட்ரம்ப்பின் முயற்சிகளும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. அதன் ஒரு பகுதியாகத் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றும் இந்தியாவிடம் அவர் கூறி வருகிறார். ஆனால், இந்தியா ட்ரம்ப்பின் பேச்சை கேட்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த ட்ரம்ப் வேறு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.