ஈரான் மீது தாக்குதல் நடத்திக்கொண்டே, மறுபுறம் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் நினைப்பதையெல்லாம் பதிவிட்டு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், லேட்டஸ்ட்டாக, ஈரானின் புதிய அதிபர் போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் கேட்டதாக பதிவிட்டுள்ளார். ஆனால், வழக்கம்போல் ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ட்ரம்ப்பின் பதிவு என்ன.? ஈரானின் பதில் என்ன.? பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் போர்
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகள், ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. அதைத் தொடர்ந்து ஈரான் பதிலடி கொடுக்கத் தொங்கிய நிலையில், அது பெரிய போராக மாறியுள்ளது. அமெரிக்காவிற்கு உதவும் அண்டை நாடுகளான கத்தார், குவைத், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும், அதையும் தாண்டி, எண்ணெய் வளங்கள் மீதும் ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனிடையே, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருவதால், ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரித்தது. இதனால், ஹார்முஸை திறக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
பல உலக நாடுகளிடம் அவர் உதவி கேட்டும், யாரும் உதவ முன்வராததால் அவர் விரக்தியடைந்துள்ளார். இதையடுத்து, ஈரானுக்கு பலமுறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார். ஆனால், ஈரான் எதற்கும் சளைக்காததால், போர் இன்னும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.
ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் பதிவு
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரான் மொத்தமாக அழிக்கப்படும் என்றெல்லாம் பதிவிட்டு, ஈரானை ட்ரம்ப் மிரட்டிப் பார்த்த நிலையில், அதற்கெல்லாம் அவர்கள் அசைவதுபோல் தெரியவில்லை. அவர்களும் மிரட்டலையே பதிலாக கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், புதிய குண்டு ஒன்றை போட்டுள்ளார் ட்ரம்ப். ஆம், ஈரானின் புதிய அதிபர், போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் கேட்டதாகவும், அவர் முன்பு இருந்த ஈரானிய அதிபர்களை விட மிகவும் புத்திசாலியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலையில் இருக்கும்போது நாங்கள் அதை பரிசீலிப்போம், அதுவரை ஈரானை முற்றிலும் அழித்து, அவர்கள் கூறுவதுபோல் கற்காலத்திற்கு திருப்பி அனுப்புவோம் என்று பதிலளித்ததாக ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் பதிவிற்கு ஈரான் மறுப்பு
ஏற்கனவே, ஈரானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ட்ரம்ப் கூறிவந்ததை எல்லாம் ஈரான் மறுத்தது. அதேபோல், அமெரிக்கா ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டதற்கும் மறுப்பு தெரிவித்தது. தங்களிடம் யாரும் பேசவில்லை என்று தெளிவாக கூறிவிட்டது ஈரான்.
இந்த சூழலில், ட்ரம்ப் நேற்று போட்டுள்ள பதிவிற்கும் பதிலளித்துள்ள ஈரான வெறியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ட்ரம்ப்பின் இந்த கூற்று முற்றிலும் பொய்யானது என்றும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார்.
இதனால், ட்ரம்ப் வழக்கம்போல் தனதுக்கு தோன்றியதை பதிவிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே 2 அல்லது 3 வாரங்களில் போர் முடிந்துவிடும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போது, தாக்குதல் தொரும் என்று கூறியுள்ளார். அவர் மாற்றி மாற்றி பேசி வருவதால், ஒட்டுமொத்த உலகமுமே குழப்பத்தில் உள்ளது.
