அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவுகள் போடுவது வழக்கம். எந்த விஷயமாக இருந்தாலும், உடனுக்குடன் பதிவுகளை போட்டு விடுவார். எனினும், அதில் பாதி அவரது கற்பனையாகத் தான் இருக்கும். அதனால், அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பது, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளித்த பிறகு தான் தெரியவரும். அதற்கு உதாரணமாக பல விஷயங்களை கூறலாம். அதில் ஒன்று, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அவர் கூறியதை இன்று வரை இந்தியா மறுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சீனா குறித்து அவர் ஒரு பதிவை போட்டுள்ளார். அது உண்மையா என்பது, சீனா பதிலளித்த பிறகு தான் தெரியவரும். இப்போது, அவரது பதிவு குறித்து பார்க்கலாம்.
ட்ரம்ப்பின் பதிவு என்ன.?
ஈரானுடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரில், சீனாவின் பங்களிப்பு குறித்து ஏற்கனவே பலவிதமான தகவல்கள் வெளியாகின. அவை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், சமீபத்தில் ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு பதிலளிக்கும் விதமாகத் தான், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக நான் திறப்பது குறித்து சீனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதை நான் அவர்களுக்காகவும், இந்த உலகத்திற்காகவுமே செய்கிறேன். இப்படி ஒரு சூழல் மீண்டும் ஏற்படாது. ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சில வாரங்களில் நான் அங்கு செல்லும்போது, சீன அதிபர் ஷி எனக்கு ஒரு பெரிய தழுவலை அளிப்பார். நாங்கள் புத்திசாலித்தனமாகவும், மிகச் சிறப்பாகவும் இணைந்து செயல்படுகிறோம்! இது சண்டையிடுவதை விட மேலானது அல்லவா??? ஆனால், தேவைப்பட்டால் சண்டையிடுவதில் நாம் மிகவும் திறமையானவர்கள் - வேறு யாரையும் விட மிகச் சிறந்தவர்கள்!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்“ என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் பிரச்னை என்ன.?
கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்தன. அதற்கு பதிலடி கொடுத்த ஈரான், ஒருபுறம் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி வைத்தது. இதையடுத்து, உலகம் முழுக்க கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டு, ட்ரம்ப்பின் மீது அழுத்தம் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்று ட்ரம்ப் முயன்று வந்தார். அதற்காக பல மிரட்டல்களை ஈரானுக்கு அவர் விடுத்த நிலையில், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் அனுமதியுடன் பயணித்து வந்த நட்பு நாடுகளின் கப்பல்கள் உள்பட, அனைத்து போக்குவரத்தையும் அமெரிக்கா முடக்கும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா கண்டனமும், எதிர்ப்பு தெரிவித்தது. தங்களது கப்பல்களை தொட வேண்டாம் எனவும் எச்சரித்தது. இதனிடையே, ஈரானுக்கு சீனா ஆயுதங்கள் வழங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், சீனா அதை மறுத்தது.
ஏற்கனவே, ஈரானுக்கு செயற்கைக்கோள் உதவியை சீனா வழங்கியதாகவும் ஒரு தகவல் இருந்த நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் தான், அதற்கு விளக்கமளிக்கும் விதமாக, ட்ரம்ப் தற்போது பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் கூறியிருப்பதில் உண்மை இருக்கிறதா என்பது, சீனாவின் பதிலுக்கு பிறகே தெரியவரும்.
