US Trump Trade: ”சமையல் எண்ணெயால் வெடித்த பிரச்னை” கொதிக்கும் ட்ரம்ப், சீனாவை ஒடுக்க இந்தியாவிற்கு அழைப்பு
US Trump Trade: சீனா உடனான வணிக உறவை முறித்துக் கொள்ள பரிசீலிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

US Trump Trade: கனிம வளங்கள் விவகாரத்தில் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, இந்தியாவின் ஆதரவு வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சீனாவை மிரட்டும் ட்ரம்ப்:
அமெரிக்க விவசாயிகளிடமிருந்தே வேண்டுமென்றே சோயா பீன்ஸ் கொள்முதலை சீனா நிறுத்தியுள்ளதாகவும், இதனால் அந்நாட்டுடனான வணிகத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வர பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சீனா எங்களிடமிருந்து சோயாபீன்ஸ் வாங்குவதை உள்நோக்கத்துடன் நிறுத்தி, அமெரிக்கா சோயாபீன்ஸ் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது பொருளாதார ரீதியாக விரோதமான செயல் என்று நான் நம்புகிறேன். அதற்கு பழிவாங்கும் விதமாக, சமையல் எண்ணெய் மற்றும் வர்த்தகத்தின் பிற கூறுகளுடன் சீனா தொடர்புடைய வணிகத்தை நிறுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். உதாரணமாக, சமையல் எண்ணெயை அமெரிக்காவால் எளிதாக உற்பத்தி செய்யலாம், அதை சீனாவிடமிருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு பேரிழப்பு:
அமெரிக்காவில் சோயா பீன்ஸ் அறுவடை தொடங்கியுள்ளது. ஒருகாலத்தில் அந்நாட்டிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதில் முதன்மையான நாடாக இருந்த சீனா, இந்த முறை அந்த நடவடிக்கையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. இதனால் விலை கடுமையாக வீழ்ச்சி கண்டு இருப்பது, அமெரிக்க விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் நிறுத்தமானது, அமெரிக்கா உடனான வர்த்தகப் போருக்கு ஏற்கனவே அரிய வகை கனிமங்களை பயன்படுத்தியது போல, தற்போது சோயா பீன்ஸை சீனா பயன்படுத்துவதாக கருதப்படுகிறது. உலகின் தேவைக்கான சோயாபீன்ஸ்களில் தோராயமாக 61% ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா, தற்போதைய அறுவடை காலத்தில் சீனாவிலிருந்து பூஜ்ஜிய கொள்முதல்களைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பதிவான ரூ.1.05 லட்சம் கோடியிலிருந்து மிகப்பெரிய சரிவாகும்.
இந்தியாவின் ஆதரவு கோரும் அமெரிக்கா
இதனிடையே, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரில், அரிய வகை கனிம வளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமெரிக்காவின் நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட், ”இது சீனா vs உலகின் பிற பகுதிகள் என மாறியுள்ளது. அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவிருக்கும் கனிமவளங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தீவிரமாக எதிர்க்கிறோம். சீனர்கள் இப்போது ஏன் இதைச் செய்ய முடிவு செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
நாங்கள் பல்வேறு வழிகளில் எங்கள் இறையாண்மையை நிலைநாட்டப் போகிறோம். நாங்கள் ஏற்கனவே நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த வாரம் நாங்கள் அவர்களைச் சந்திப்போம், மேலும் ஐரோப்பியர்கள், இந்தியர்கள், ஆசியாவில் உள்ள ஜனநாயக நாடுகளிடமிருந்து கணிசமான உலகளாவிய ஆதரவைப் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.
கனிம வளங்களில் சீனாவின் ஆதிக்கம்:
அக்டோபர் 9 ஆம் தேதி சீனா வெளியிட்ட புதிய விதிகளின்படி, சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் 0.1% க்கும் அதிகமான அரிய கனிம வளங்களை கொண்ட எந்தவொரு பொருளையும் ஏற்றுமதி செய்ய அரசாங்க ஒப்புதலைப் பெற வேண்டும். தடைசெய்யப்பட்ட கனிமங்களின் பட்டியலை விரிவுபடுத்தியதோடு, வெளிநாட்டு ராணுவ பயன்பாட்டிற்கான ஏற்றுமதிகளையும் தடை செய்துள்ளது. உலகின் அரிய கனிம வளங்களில் கிட்டத்தட்ட 70% மற்றும் செயலாக்கத்தில் 90% சீனாவைக் கட்டுப்படுத்துகிறது. இது இந்தப் பொருட்களைச் சார்ந்திருக்கும் துறைகளில் சீனாவிற்கு அதிக செல்வாக்கை அளிக்கிறது. அதனை தான் தற்போது, அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.





















