INDIA US Trade: உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் தொடர்வதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளாராம்.

”இந்தியா மீது 100% வரி போடலாம்”

ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளாக திகழும் இந்தியா மற்றும் சீனா மீது, 100 சதவிகிதம் வரி விதிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான புதினின் போரை முடிவுக்கு கொண்டு வர, அனைவரும் சேர்ந்து எடுக்கும் ஒரு கூட்டு முயற்சி இது என அவர் வலியுறுத்தியுள்ளாராம். போருக்கான நிதியை திரட்டும் ரஷ்யாவின் முயற்சியை தடுப்பது குறித்து ஆலோசிக்க, வாடிங்டனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர். அந்த கூட்டத்தில் தொலைபேசி வாயிலாக அதிகாரிகள் மத்தியில் பேசிய ட்ரம்ப், 100 சதவிகிதம் வரி விதிப்பது குறித்து பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

”அமெரிக்கா தயார்”

கூட்டத்தில் பேசிய ஒரு அதிகாரி, “இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவிகிதம் வரி விதிக்க நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது ஐரோப்பிய நட்பு நாடுகள் இதை செய்ய முன்வந்தால் மட்டுமே நாங்கள் இதை செய்வோம்” என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூட்டட்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மற்றொரு அதிகாரி, “இந்தியா மற்றும் சீனா மீது ஐரோப்பிய நாடுகள் என்ன வரி விதித்தாலும், அதை அப்படியே பின்பற்ற அமெரிக்கா தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது இரு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அமெரிக்க வரிகளில் அதிவேக உயர்வுக்கு வழிவகுக்கும். ட்ரம்ப் ஏற்கனவே இந்திய பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார், அதே நேரத்தில் சீன ஏற்றுமதிகள் மீதான வரிகள் 30 சதவீதமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டி, மோதியும் ட்ரம்ப் தோல்வி

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் சில மணி நேரங்களில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவேன் என ட்ரம்ப் பேசியிருந்தார். ஆனால், 8 மாதங்களாகியும் அதனை சாதிக்க முடியவில்லை. இதுதொடர்பாக முன்னெடுத்த பல முயற்சிகளும் எதிர்பார்த்த வெற்றிகளை தராததால், வெள்ளை மாளிகை நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாம். அதனடிப்படையிலேயே, புதினின் போருக்கான முக்கிய வருவாய் ஆதாரத்தைத் துண்டிக்கும் வகையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவிகிதம் அபராதம் விதிக்கும் திட்டத்தை ட்ரம்ப் வகுத்துள்ளாராம். 

ஒரு புறம் தூது.. மறுபுறம் சூது..

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக சுட்டிக்காட்டி, இந்தியா மீது மட்டும் ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்தார். தொடர்ந்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். இதனால் இருநாட்டு உறவில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தான், ”என்னுடைய மிக நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன். இரு சிறந்த நாடுகளுக்கிடையே வெற்றிகரமான முடிவு எட்டப்படுவதில் எந்த சிரமமும் இருக்காது என எனக்கு தோன்றுகிறது” என தனது சமூக வலைதளதில் பதிவிட்டார். இதனை மோடியும் வரவேற்க, இந்தியா - அமெரிக்கா இடையேயான கருத்து வேறுபாடுகள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த கையோடு, மறுபுறம் இந்தியா மீது 100 சதவிகிதம் வரி விதிக்கவும் ட்ரம்ப் அழைப்பு விடுத்து இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.