USA Iran War Peace Deal: அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதும், ஹார்மஸ் நீரிணை திறக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜுன்.19ம் தேதி அமைதி ஒப்பந்தம்:

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதியாகியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதையடுத்து இருநாடுகளுக்கு இடையே 107 நாட்களாக நீடித்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம், வரும் ஜுன் 19ம் தேதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகிறது எனவும் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஹார்மஸ் நீரிணை உலக பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நீரிணை வழியாக தான் சர்வதேச நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஹார்மஸ் திறப்பு எப்போது? - ட்ரம்பின் அறிவிப்பு

சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தற்போது முழுமையடைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள். இதன் மூலம் ஹார்மஸ் நீரிணை திறக்கப்படுவதோடு, ஈரான் துறைமுகத்தை அமெரிக்க கடற்படை முடக்கி வரும் பணிகளும் முடிவுக்கு வரும். உலக நாடுகளின் கப்பல்கள் தங்களது இன்ஜின்களை ஸ்டார்ட் செய்யுங்கள். எண்ணெய் விநியோகம் தொடரட்டும். இந்த மாபெரும் ஒப்பந்தம் இப்பிராந்தியம் முழுவதற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். பல அதிபர்கள் ஈரானுடன் சமாதானம் செய்ய முயன்றனர், ஆனால் எனக்கு முன்பு அவர்கள் அனைவரும் தோல்வியுற்றனர். பிராந்தியத்தின் தலைவர்கள், முதல் முறையாக, உண்மையான அமைதியை அடைய தங்களுக்கு உதவக்கூடிய ஒரு அதிபரை கண்டறிந்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகி, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடங்கியவுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரு திசைகளிலும் எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கும். இது பிராந்தியத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத பிரச்னை முடிந்ததா?

ட்ரம்பின் 80வது பிறந்தநாளில் வெளியான இந்த அறிவிப்பு, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஒரு வார காலமாக நிலவிய தீவிரமான ராஜதந்திர மற்றும் ராணுவப் பதற்றங்களின் உச்சகட்டமாக அமைந்தது. புதிய ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணு ஆயுத செறிவூட்டல் திட்டம் மற்றும் அதன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் 60 நாட்களுக்கு பேச்சுவார்த்தைகளைத் தொடரும். முன்னதாக ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்தியஸ்தர்களின் உதவியுடன் இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டிருந்தபோது, ​​போர் நிறுத்தம் அமலில் இருந்தது.

இதையும் படியுங்கள்: Raghava Lawrence: ”மக்களை நாய் என்று சொன்னேனா? மனசாட்சி இல்லாதவனா நான்?” - ராகவா லாரன்ஸ் வேதனை

இஸ்ரேலால் தொடரும் பதற்றம்..!

ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ட்ரம்ப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் காரசாரமான உரையாடலை நடத்தியதாகக் கூறப்படுகிறது . சமாதான முன்னெடுப்பைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு புதிய நடவடிக்கையையும் தவிர்க்குமாறு வலியுறுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து உலக நாடுகள் எதிர்பார்க்கும் அமைதி ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தாகும் என நம்பப்படுகிறது. அதன் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் சீரடைந்து, எரிபொருட்களின் விலை குறைந்து பொருளாதார நெருக்கடிகள் தளருமா? என்பதே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு குடிமக்களின் எண்ணமாக உள்ளது.