Trump Reliance: கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அம்பானி முதலீடு
கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 27.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும், இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் தரப்பில் இருந்து முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் ஆற்றல் உற்பத்தி திறனை மேம்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ள புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது, டெக்சாஸில் உள்ள ப்ரவுன்ஸ்வில்லே துறைமுகம் அருகே அமைக்கப்பட உள்ளதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆற்றல் துறையில் ஆதிக்கம்
அறிவிப்பு தொடர்பான பதிவில், “புதிய ஒப்பந்தம் மூலம் அற்றல் துறையில் உண்மையான ஆதிக்கத்திற்கு அமெரிக்கா மீண்டும் திரும்புகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியதான இந்த ஒப்பந்தம் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய வெற்றி. இந்த மகத்தான முதலீட்டிற்காக நட்பு நாடான இந்தியாவிற்கும், அவர்களின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போர் சூழலில் பெரும் முதலீடு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் 12வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹார்மூஸ் நீர்வழிப்பாதை மூடப்பட்டுள்ளதால், உள்நாட்டில் வணிக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தான், 50 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்காவில் மிகப்பெரும் பொருட்செலவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அதுவும் இந்திய நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விலையேற்றம் - அமெரிக்கா சொல்வது என்ன?
வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் பல ஆசிய நாடுகள், தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கின்றன. அமெரிக்காவிலும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த வெள்ளை மாளிகை, ”அமெரிக்க மக்கள் நிம்மதியாக இருங்கள், சமீபத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு தற்காலிகமானது, இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு எரிவாயு விலைகளைக் குறைக்கும். ஆபரேஷன் எபிக் ப்யூரியின் தேசிய பாதுகாப்பு நோக்கங்கள் முழுமையாக அடையப்பட்டவுடன், அமெரிக்கர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் விரைவாகக் குறைவதைக் காண்பார்கள். அதுவும் தற்போதைய ராணுவ நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக இருக்கலாம்” என தெரிவித்தது.
