Trump Tariff: இந்தியா ரஷ்யா உடன் அல்ல அமெரிக்கா உடன் தான் இருக்க வேண்டும் என, ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவை விமர்சிக்கும் அமெரிக்கா:
ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தக உறவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகரான, பீட்டர் நவேரா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன மற்றும் ரஷ்ய அதிபர்கள் உடனான மோடியின் சந்திப்பு அவமானகரமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்தியா மீது கடுமையான விமர்சனங்கள் அமெரிக்கா தரப்பில் வைக்கப்படுவதால், இருநாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
”வெட்கக்கேடு..”
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு குறித்து பேசுகையில், “சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் சேர்த்து பிரதமர் மோடியை பார்ப்பது வெட்கக்கேடானது. அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை? அவர் ரஷ்யா உடன் அல்ல அமெரிக்கா உடன் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வார் என்பதை நான் நம்புகிறேன்” என பீட்டர் நவேரா தெரிவித்துள்ளார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடன், பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த கடுமையான விமர்சனத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
தொடர்ந்து அட்டாக் செய்யும் அமெரிக்கா:
ரஷ்யா உடனான வர்த்தகத்தை காரணம் காட்டி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இது உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. ஆனாலும், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்காத இந்தியா, உள்நாட்டு பொருட்களுக்கான சந்தையை பன்முகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, ட்ரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவேரா இந்தியாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். பல தீவிரமான கருத்துகளையும் கூறி வருகிறார். எண்ணெய் வாங்குவதற்காக, ”இந்தியா கொடுக்கும் பணத்தில் தான், உக்ரைன் போரே நடைபெறுகிறது. உக்ரைனுக்கான அமைதி இந்தியா வழியாக தான் செல்கிறது” என்றெல்லாம் பேசி வருகிறார்.
சாதி ரீதியிலும் விமர்சனம்:
இதுபோக, ”உலக நாடுகளில் வேறு எந்த நாடும் விதிக்காத அளவில் வரிகளின் மகாராஜாவாக இந்திய இருப்பதாகவும், இந்தியா தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும்போது சாதாரண இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். ரஷ்யாவிற்கான சலவை நிலையமாக இந்தியா செயல்படுகிறது, இது உக்ரேனியர்களை கொல்கிறது” என்றும் நவேரா தீவிர்மாக விமர்சித்து வருகிறார்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நியாயப்படுத்தியுள்ளது, எரிசக்தி விலைகளை குறைவாக வைத்திருக்கவும், உள்நாட்டு சந்தையை நிலைப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என குறிப்பிடுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் முதலிடத்தில் உள்ள சீனா மீதோ, தொடர்ந்து ரஷ்ய பொருட்களை வாங்கி வரும் ஐரோப்பா மீதோ அமெரிக்கா எந்த வரியும் விதிக்கவில்லை. ஆனால், இந்தியாவின் மீது மட்டும் வரி விதிப்பது நியாயமற்ற செயல் என மத்திய அரசு விமர்சித்துள்ளது. அதோடு, உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அமெரிக்க விவசாய பொருட்களுக்கு இந்திய சந்தையை திறக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாகவே ரஷ்யாவை காரணம் காட்டி இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டப்படுகிறது.