China Japan Trump: தைவான் விவகாரம்; சீனா, ஜப்பான் இடையே எகிறும் பதற்றம்; ட்ரம்ப்புக்கு மாறி மாறி பறக்கும் போன் கால்கள்
தைவான் விவகாரத்தில், சீனா மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாட்டு தலைவர்களும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடம் பேசியுள்ளனர். அங்கு என்ன நடக்கிறது.?

தைவான் விவகாரம் தொடர்பாக, சீனா மற்றும் ஜப்பான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. முன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் ஒரு நீண்ட உரையாடலை நடத்திய நிலையில், தற்போது ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, ட்ரம்ப்பை தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
மோசமடையும் சீனா-ஜப்பான் உறவுகள்
இந்த மாத தொடக்கத்தில், தைவான் மீது சீனா தாக்குதல் நடத்திய நிலையில், அதை தங்களுக்குமான அச்சுறுத்தலாக பார்ப்பதாகவும், அதற்கு பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தயங்கமாட்டோம் எனவும் ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியபோது கூறியிருந்தார்.
தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதும் நிலையில், தகாய்ச்சியின் இந்த பேச்சால் டென்ஷனான சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதியை தடை செய்தார். மேலும், கூட்டு நிகழ்வுகளையும் ரத்து செய்ததுடன், ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஜின்பிங் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.
மேலும், தைவானை முற்றுகையிடவோ அல்லது கைப்பற்றவோ சீனா முயற்சித்தால், அது ஜப்பானின் பாதுகாப்பிற்கு "நேரடி அச்சுறுத்தலாக" இருக்கும் என்றும், அமெரிக்கா உடனான நாட்டின் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டுவதாகவும், தகாய்ச்சி ஒரு முக்கிய வெளியுறவுக் கொள்கை உரையில் கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.
பதற்றத்தை அதிகரித்த ட்ரம்ப்-ஜின்பிங் உரையாடல்
இத்தகைய சூழலில், கடந்த திங்கட்கிழமையன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே, தொலைபேசி மூலம் 45 நிமிட உரையாடல் நிகழ்ந்துள்ளது. அப்போது, தைவான் சீனாவிற்கு திரும்புவதன் முக்கியத்துவத்தை ஜின்பிங் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், தைவான் குறித்து ட்ரம்ப் கருத்து ஏதும் கூறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இருவரும் தென் கொரியாவில் சந்தித்த நிலையில், தற்போது தான் மீண்டும் பேசியுள்ளனர்.
ட்ரம்ப்புடன் பேசிய ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி
இதைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் தகாய்ச்சியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொடர்புகொண்டு பேசி, செய்தி வெளியாகியுள்ளது. அப்போது, ஜன்பான்-அமெரிக்கா இடையேயான உறவுகளை பலப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகாய்ச்சி கூறியுள்ளார்.
மேலும், தன்னை மிக நெருங்கிய நண்பராக ட்ரம்ப் குறிப்பிடுவதாகவும், அதனால் எந்நேரத்திலும் தன்னை அழைக்க தயங்க வேண்டாம் என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் தகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீனாவின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது ட்ரம்ப் இருக்கும் நிலையில், இது போர் வரை செல்லும் அளவிற்கு அவர் விடமாட்டார் என்றே கருதப்படுகிறது.




















