Modi Met Biden: அதிபர் பைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் பிரதமர் மோடி:


குவாட் மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். சனிக்கிழமை பிலடெல்பியாவில் தரையிறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிய, பிரதமர் மோடி அவர்களுடன் உரையாடினார். பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.






மோடிக்கு பைடன் விருந்து:


தொடர்ந்து, டெலாவேரியில் கிரீன்வில்லியில் உள்ள தனது இல்லத்தில், அதிபர் பைடன் பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார். இதற்காக தனது வீட்டிற்கு வந்த மோடியை,  வாசலில் இருந்து கையை பிடித்து பைடன் உள்ளே அழைத்துச் சென்றார்.  இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமக்கு விருந்தளித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு நன்றி. அவருடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளை விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.






பைடன் போட்ட டிவீட்:


மோடி உடனான சந்திப்பு தொடர்பாக அதிபர் பைடன் வெளியுட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்தியாவுடனான அமெரிக்காவின் கூட்டாண்மை, வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது. பிரதமர் மோடி, ஒவ்வொரு முறையும் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போதும், ​​புதிய ஒத்துழைப்பைக் கண்டறியும் நமது திறனைக் கண்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். இன்றும் வேறுபட்டதல்ல” என பைடன் குறிப்பிட்டுள்ளார்.


குவாட் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.