Trump Iran War: ஈரான் தங்களுக்கு 10 பெரிய எண்ணெய் கப்பல்களை பரிசாக அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

”10 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்தியுள்ளேன்”

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கையால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. மோதல் தொடங்கி 4 வாரங்களை கடந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான், ஈரானின் கோரிக்கையை ஏற்று அவர்களது ஆற்றல் மையங்களை தாக்கும் முடிவை 10 நாட்களுக்கு அதாவது வரும் ஏப்ரல் 6ம் தேதி இரவு 8 மணி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்வதாலும், அதில் நல்ல முன்னேற்றங்கள் இருப்பதாலும் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். 

அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு:

தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ள அமெரிக்காவின் இந்த முடிவானது, மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்கு உரிய நேரத்தை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது. தெஹ்ரானின் ராணுவ மற்றும் பொருளாதாரத் திறனை பலவீனப்படுத்தும் நோக்கில், முக்கிய எண்ணெய் மற்றும் எரிசக்தி வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க-இஸ்ரேல் பல வாரங்களாக நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்கு பதிலடி தரும் விதமாக பிராந்தியம் முழுவதும் உள்ள அவர்களது தளங்களையும் அதன் நட்பு நாடுகளின் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி ஈரான் பதிலடி கொடுத்தது. இந்த சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள 10 நாட்கள் இடைநிறுத்தமானது, போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா அல்லது தற்காலிக பதற்றத் தணிப்பாக மட்டுமே உதவுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மிரட்டலும்.. சமாதான பேச்சுவார்த்தையும்..

ஹார்மஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் தொடர்பான தளங்கள் முற்றிலுமாக தாக்கி அழிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை கொடுத்தார். அப்படி நடந்தால் வளைகுடா நாடுகளை இருளில் மூழ்கச் செய்வோம் என ஈரான் பதிலடி தந்தது. இதையடுத்து, பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், ஆற்றல் மையங்களை தாக்கும் முடிவை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதனை மேலும் நீட்டிப்பதாக, ஏப்ரல் 6ம் தேதி வரை தாக்குதலை நிறுத்திவைப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரானின் கோரிக்கையின் பேரிலேயே தாக்குதலை நிறுத்தியதாக ட்ரம்ப் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை ஈரான் சொன்னால் மட்டுமே தெரிய வரும்.

10 எண்ணெய் கப்பல்கள்:

முன்னதாக சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரான் தனக்கு ஒரு மிகப்பெரிய பரிசு அளித்துள்ளது. அது பண அளவில் மிகப்பெரிய மதிப்பை கொண்டது என ட்ரம்ப் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அது என்ன பரிசு என்ற தகவலை வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “பேச்சுவார்த்தையை தொடர்ந்து நன்னடத்தையின் வெளிப்பாடாக  8 எண்ணெய் மற்றும் இரண்டு எரிவாயு கப்பல்களை ஹார்மஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க அனுமதித்துள்ளது. அதில் சில பாகிஸ்தான் கொடியை கொண்டவை” என ட்ரம்ப் பேசியுள்ளார்.