ஸ்விட்சர்லாந்து நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவது ரம்மியமான ஆல்ப்ஸ் மலை. ஐரோப்பாவின் மிக உயர்ந்த மற்றும் நீண்ட மலைத்தொடரான ஆல்ப்ஸ், சுமார் 1200 கிலோ மீட்டருக்கு பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, லிச்சென்ஸ்டீன், ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் படர்ந்துள்ளது.


ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரும் சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த ஆல்ப்ஸ் மலையில் உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கி சுவிஸ் ரயில்வே நிறுவனம் சாதனைப் படைத்துள்ளது.


ஸ்விட்சர்லாந்தின் ரேஷியன் (Rhaetian) ரயில்வே நிறுவனம் 1.9 கிமீ நீளம், 100 பெட்டிகள், 4 இன்ஜின்களுடன் அந்நாட்டின் பிரேடா பகுதியிலிருந்து பெர்குவென் வரை இந்த ரயிலை இயக்கியுள்ளது.


2008ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றாக இந்தப் பாதை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 22 சுரங்கங்கள் வழியாகவும்,  சில மலைகள் வழியாகவும், 48 பாலங்கள் வழியாக சுமார் 25 கிலோ மீட்டருக்கு செல்லும் இந்தப் பாதையில் சுமார் ஒரு மணிநேரம் ரயில் பயணித்துள்ளது.


 






ஸ்விட்சர்லாந்து நாட்டின் பொறியியல் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், சுவிஸ் இரயில்வேயின் 175 ஆண்டுகளைக் கொண்டாடவும் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரேஷியன் ரயில்வே இயக்குநர் ரெனட்டோ ஃபாசியாட்டி தெரிவித்துள்ளார்.


 






ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியானது வலுவான கலாச்சார அடையாளத்தைக் கொண்டுள்ளது. விவசாயம், பாலாடைக்கட்டி தயாரித்தல், மரவேலை போன்ற பாரம்பரிய கலாச்சாரங்கள் ஆல்பைன் கிராமங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.


சுற்றுலாத் தொழில்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதிகளில் வளரத் தொடங்கின. மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரிதும் இங்கு சுற்றுலாத் துறை விரிவடைந்து இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆதிக்கம் செலுத்தும் இப்பகுதிகளின் பிரதான துறையாக மாறியுள்ளது.