சர்வதேச விண்வெளி நிலையத்தில், சிக்கி கொண்டிருக்கும் இந்தியா வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் நிலை குறித்தும், பூமிக்கு திரும்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் உடல்நிலை பாதிப்பு குறித்தும் காண்போம்.
விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்:
கடந்த ஜூன் மாதம் 7ம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒரு வார கால ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அவர்கள் சென்ற விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது.
எரிபொருள் கசிவு:
இருவரையும் ஏந்திச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், தனது முதல் விண்வெளி பயணத்தை, வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆனால், பயணத்தின் புறப்பாட்டின் போதே எரிபொருளான ஹீலியம் கசிவுகள் இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உந்தி தள்ளும் த்ரெஷ்டர் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் இருந்ததாகவும் தகவல் வெளியானது ”அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல்வேறு கேள்விகள்:
பிரச்னை இருந்தபோதும், எப்படி பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். விண்கலத்தின் திறனை உறுதி செய்வதற்காக மனித உயிர்களை அடமானம் வைக்கிறார்கள் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் , ஏற்கனவே ஒரு விண்கலன் இருப்பதால், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், உடனடியாக அழைத்து வர பயன்படுத்தப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தை சரிசெய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கல்களை தீர்ப்பதற்கான கால நீடித்து கொண்டு இருப்பதால், 10 நாட்கள் திட்டமிடப்பட்ட பயணமானது, 50 நாட்களை கடந்து சென்றுள்ளது.
உடல்நலன் சிக்கல் கோளாறு?
இந்நிலையில், " புவீயீர்ப்பு சக்தி இல்லாத இடங்களில் மனிதர்கள் அதிக நாட்கள் இருப்பது உடல்நலனை பாதிப்புக்கு உள்ளாக்கும் , உடல் தசைகள் விரைவாக பலவீனமடையும், மேலும் எலும்புகள் பூமியுடன் ஒப்பிடும்போது விரைவான விகிதத்தில் தாதுக்களை, குறிப்பாக கால்சியத்தை இழக்கின்றன. இது எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமையை குறைக்க வழிவகுக்கிறது, இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு திரும்பும்போது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தும்" என மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சுனிதா வில்லியம்சுக்கு, விண்வெளி பயணமானது, இது முதல் முறை இல்லை, இதைவிட அதிக நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார். எனவே , இதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வல்லமை அவருக்கு உள்ளது என அறிவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், எப்போது விண்கலம் சரி செய்யப்படும், எப்போது விண்வெளி வீரர்கள் திரும்புவார்கள் என்பது குறித்தான தகவல் இதுவரை வெளியாகவில்லை.