காலே மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 364 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த பிறகு, காலேயில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி கேப்டன் திமுத் கருணாரத்னே மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் அரை சதங்களால் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 86 ரன்களில் ஆட்டமிழந்தார், மெண்டிஸ் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக, காலை போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் போட்டியை நிறுத்தும்படி, இலங்கை மக்கள் காலே மைதானத்தை முற்றுகையிட முயன்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பாதுகாப்பிற்கு நடுவே மைதானத்திற்கு உள்ளே செல்லாததால் இலங்கை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடைபெற்று இரண்டாவது நாள் போட்டியும் முடிவு பெற்றது.
கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தவித்து வருகிறது. நிலைமை சீராக்க வேண்டும் என்று பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மோசமான சூழ்நிலையிலும் இலங்கையில் கிரிக்கெட் தொடர் அவசியம்தானா..? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
யார் எக்கேடு கெட்டு போனால் எங்களுக்கு என்ன..? நாங்கள் இலங்கை - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை நடத்தியே தீருவோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்