இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பள்ளிகள் ஜூலை 10 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனிடையே இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அந்நாட்டின் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தகவல் தெரிவித்துள்ளார். மேலும் எரிபொருளை குறைந்த அளவு பயன்படுத்துமாறும், தலைநகரான கொழும்புவில் பள்ளிகள் ஜூலை 10 ஆம் தேதி மூடப்பட்டும், மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அங்கு 9 ஆயிரம் டன் டீசல் மற்றும் 6 ஆயிரம் டன் பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ள நிலையில் டோக்கன் முறை பின்பற்றப்பட்ட எரிபொருள் மக்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். கொரோனா தொடங்கியது முதலே இலங்கையில் பாடசாலைகளில் முறையான கல்வி நடவடிக்கை தொடரவில்லை என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் நடந்தே பல கிலோமீட்டர் தூரம் சென்று வருகின்றனர். இலங்கையின் கிராமப்புறங்களில் ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே தற்போது சேவையில் இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியால் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசு பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்ய திட்டங்களை வகுத்தாலும் அது ஒரு குறுகிய கால தீர்வாக இருக்கிறதே தவிர நிரந்தர வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வாக அமையவில்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி ,விவசாயம், தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி , ஆடை உற்பத்தியென இலங்கைக்கு வருமானம் தரக்கூடிய தொழில்கள் நலிவடைந்து வர்த்தகர்கள் ,வியாபாரிகள் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
- ரத்திகா சுதர்ஷினி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்