பின்னணியில் சந்திரிகா:


இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவியில் இருந்து வெளியேற்றும் போராட்டங்களின் பின்னணியில், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மூளையாக செயல்பட்டவர் என இலங்கை விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்திருப்பது, தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சந்திரிக்காவுக்கு சிங்கள பௌத்த மக்கள் மீது கோபம் இருப்பதாகவும், அவரது தந்தையை சுட்டுக்கொன்ற புத்தரக்கித்த தேரர் மீது கோபம் இருக்கலாம் எனவும் இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், கீர்த்தி ரத்நாயக்க கூறியிருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவிலிருந்து தகவல்:


கோத்தாபய ராஜபக்ச இன்னும் ஒரு வருடத்தில் வீட்டுக்கு செல்வார் என தான் தெளிவாக முன்கூட்டியே தெரிவித்திருந்ததாகவும், தனக்கு கிடைத்த இந்த தகவலை, கோத்தபய ராஜபக்சவின் தனிப்பட்ட ஊழியர்கள் குழுவில் இருக்கும் ஷர்மிளா ராஜபக்சவுக்கு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி தன்னை கைது செய்வதற்கு முன்னர் இந்த தகவலை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடந்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட அனைத்து விஷயங்களும்  முன்கூட்டியே, இந்தியாவிலிருந்து தனக்கு கிடைத்தது என முன்னாள் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க கூறியுள்ளார். ரா மற்றும் தமிழகத்தில் உள்ள புலனாய்வு பிரிவுகள் இலங்கையில் நடக்கும் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை தமிழக புலனாய்வு பிரிவினரே கண்டறிந்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில், கோத்தாபய ராஜபக்ச வெறும் பகடைக்காய் மாத்திரமே எனவும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னாள் விமானப்படை அதிகாரி பேசி இருக்கிறார்.


காலிமுகத்திடலில் நடப்பது போராட்டம் அல்ல காலிமுகத்திடலில் நடப்பது  பயங்கரவாதம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். இந்த பிராந்தியத்தின் பெரிய அண்ணன் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ள அவர் , இந்த பிராந்தியத்தை, இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது. இந்தியா தான், இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி. இந்து நாடு என்பதை, இந்தியா காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் ஜிகாத் பிரச்னையை மையமாக வைத்து  அரசியல் காய்நகர்த்தல்களை  மேற்கொண்டு வருகிறது என குறித்த முன்னாள் விமானப்படை அதிகாரி பேசி இருக்கிறார்.


இந்தியாவில் தாக்குதல்:


இந்திய குடியரசு தினமன்று, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது என்ற ஒரு தகவலையும் அவர்  தெரிவித்திருக்கிறார். தாக்குதலை திட்டமிட்டவர் விப்லால் மௌலவி என்பவர் என  அவரது பெயரையும் குறிப்பிட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தையும் தான் இலங்கை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் கூறியதாக விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அப்போது தன்னை கைது செய்ததாகவும், அந்த சமயத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்ட நபர்,  பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாகவும் நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.


அதேபோல் சென்னை எக்மோரில் உள்ள மஹாபோதி விகாரை மீது தாக்குதல் நடத்த, தமிழக புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கு, விப்லால் மௌலவி இரண்டு மில்லியன் ரூபா வழங்கியுள்ளார் என்ற ஒரு தகவலையும் அவர் கூறியுள்ளார்.


விசா மறுப்பு:


மேலும், கோத்தபயவுக்கு  இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து பல்கேரியா போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்தது உண்மை. காலி முகத்திடல் போராட்டத்தில் பின்னணியில் இருக்கும் சந்திரிக்காவின் முக்கிய நோக்கம் கோத்தபாயவை ஆட்சியில் இருந்து அகற்றுவதேயாகும். இலங்கையில் முஸ்லிம் இனவாதத்தை தூண்ட போலி ஐ.எஸ். தாக்குதல் நடத்தப்பட இருப்பதை நான் முன்கூட்டியே தெரிவித்திருந்தேன், ஈஸ்டர் தாக்குதலில் கோட்டாபய ஒரு பகடைக்காய் மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளார்.


கீர்த்தி ரத்நாயக்க என்ற முன்னாள் விமானப்படை அதிகாரி, இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், அப்படியான தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் காலிமுகத் திடல் போன்ற போராட்டம் நாட்டில் நடக்க போகிறது என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருந்தார் என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.