இலங்கையில் நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, டலஸ் அழக பெருமவை ஆதரிப்பது என முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ராஜபக்ச கட்சியின் டலஸ் அழக பெரும வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் ராஜபக்ச கட்சியின் மற்றொரு பிரிவு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரப்பதால் கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளைய தினத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வெற்றிடமாகியுள்ள அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தெரிவித்தாவது, ”மக்கள் தொடர்பில் சிந்திக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருகிறது. வளமான எதிர்காலத்திற்காக, சிறந்த அரசியல் கலாசாரத்தை ஸ்தாபிக்கும் வகையில், பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய தற்போது பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கு தாம் போட்டியிடவுள்ளேன். அரசியல் நிறக் கண்ணாடிகளில் இருந்து விலகி, பொதுமக்களின் நலனுக்காக, பண்பான அரசியல் கலாசாரத்தை இலங்கையில் ஸ்தாபிக்கும் நேர்மையான எண்ணத்தில், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறேன்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக அனைவரும் இணங்கும் பொருளாதார திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சட்ட ஆதிக்கத்தை நிலைநாட்டி, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை பாதுகாத்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் தாய் நாட்டை வெற்றிப்பாதையில் கட்டியெழுப்ப முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும், எதிர்க்கட்சிக்கும்,ஆளும் தரப்பிற்கும் இடையில் கருத்தொற்றுமையுடன், கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் கோரிக்கை என்ன என்பதை பாராளுமன்றில் உள்ள பெரும்பாலானோர் விளங்கிக்கொள்வதில்லை.
நாட்டுக்காக ஒன்றினையுங்கள் என மதிப்பிற்குரியவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து ஒன்றினைந்துள்ளோமே தவிர பதவி ஆசைக்காக அல்ல,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் மாலை வரை ஜனாதிபதி தெரிவித்தற்காக போட்டியிட தீர்மானித்திருந்தார். எமது தரப்பினர் சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும் எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் எதிர்பார்க்காத அர்ப்பணிப்பை செய்துள்ளார். பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ஒரு கட்சியாலோ,தனி தலைவராலோ முடியாது.இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றினைந்த தற்போதைய நெருக்கடி தீர்வு காண வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்