பழைய நிலைக்கு இலங்கை:


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலட்சக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிகவும் மோசம் அடைந்து செல்கிறது. மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் ,போக்குவரத்து வசதி இல்லாமல் ,தமது அவசர தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வரும் ஒரு நிலைமையே அங்கு காணப்படுகிறது . மீண்டும் பழைய சைக்கிள் ,அந்த பழைய மாட்டு வண்டி , அடுப்பை பற்ற வைக்க விறகை தேடும் மக்கள் என இலங்கையில் மக்கள் ஆங்காங்கே அலைந்து திரிவதை காண முடிகிறது .இந்நிலையில் ஒரு வேளை உணவுக்கு கூட  மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.




உணவு பற்றாக்குறை:


இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையுடன் வாழ்வதாக உலக உணவுத் திட்ட அமைப்பு, தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இலங்கை அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி என்பது, தற்போது மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளதை காண முடிவதாக கூறப்படுகிறது. இந்த பொருளாதார உணவு நெருக்கடியின் முழுச் சுமைக்குள் சிக்கி இலங்கை மக்கள் தவித்து வருவதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்திருக்கிறது.


குறிப்பாக இலங்கையில் பத்தில் மூன்று குடும்பங்கள் உணவு  பற்றாக்குறைவுடன் வாழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 6.2 மில்லியன் மக்கள் ஓரளவு உணவு பற்றாக்குறையுடன் வாழ்வதாகவும், அதில் 65 ஆயிரத்து 600 குடும்பங்கள் மிக மோசமான உணவு பற்றாக்குறையுடன் திண்டாடி வருவதாகவும் உலக உணவு திட்ட நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


பணவீக்கத்தால் பாதிப்பு:


இலங்கையில் ஏற்பட்டுள்ள அதீத விலை ஏற்றம் என்பது மக்களின் உணவு பட்டியலை மிகவும் மோசமாக பாதிப்படையச் செய்திருக்கிறது . குறிப்பாக உணவுப் பொருட்களின் அதிக விலையேற்றம் காரணமாக ஊட்டச்சத்து மிக்க உணவுகளை  வாங்குவதற்கு, மக்கள் முன் வருவதில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வாங்கி உண்பதற்கு போதுமான பணம் இல்லாமையால் பல குடும்பங்கள் உணவு உண்பதை தவிர்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக 61% குடும்பங்கள் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக தமக்கு கைகளில் என்ன  கிடைக்கிறதோ, அதை உண்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் நாள் தோறும் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ளவில்லை என சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான அளவு உணவு உண்பதில்லை எனவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கிறது.


மலைப் பிரதேச மக்கள் அதிகம் பாதிப்பு:


இலங்கையின் மலைப்பிரதேசத்தில் வாழும் அதாவது தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்கள் மிகவும் உணவு பற்றாக்குறையுடன் வாழ்வதாக அந்த அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டிருக்கிறது. இலங்கையின் ஏனைய குடும்பங்களோடு ஒப்பிடும் போது, இந்த பெருந்தோட்ட மலையக மக்களை நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் ,உணவு பற்றாக்குறை என்பது அங்கு தற்போது தீவிரமடைந்திருப்பதாகவும் உலகம் திட்ட அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. அதேபோல் இந்த மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட உணவிற்காக கடன் வரும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஐநாவின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


இலங்கையில் இந்த பொருளாதார நெருக்கடியான  கால கட்டத்தில், தமது வாழ்வாதாரத்தை சமாளிக்க சுமார் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கஷ்டங்களை அனுபவித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.. இலங்கையில் நாளுக்கு நாள்  மோசம் அடையும் பொருளாதார நிலைமையால் மக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


கடைகள் மூடப்படும் நிலை:


உணவு பற்றாக்குறை ,உணவு உட்கொள்ளும் முறை ,இந்த சூழ்நிலையில் இலங்கையில் உணவு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது . இந்நிலையில், இலங்கையில் பேக்கரி உற்பத்தி தொழிலும் முற்றும் முழுதாக பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது . அதாவது பேக்கரிகளை கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.


பேக்கரியை தொடர்ந்து நடத்த எரிபொருட்கள் தேவை எனவும் டீசல் அதிகளவு தேவைப்படுவதாகவும், அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே பேக்கரி உள்ளிட்ட சில கடைகளை மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக இலங்கை மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.