இலங்கையில் தொடர் கனமழை பெய்து வருவதால், பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி
இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும், சில இடங்கில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 44 பேரை காணவில்லை என்றும் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழையால் மொத்தம் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய மாகாணத்தில் தேயிலை அதிகம் பயிரிடப்படும் மலைப் பகுதி மாவட்டமான பதுல்லாவில் அதிக அளவாக 19 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல், கேகாலை மற்றும் நுவரெல்லா மாவட்டங்களிலும் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
இலங்கையின் மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பாறைகளும் மரங்களும் தண்டவாளங்களில் விழுந்ததை அடுத்து பல இடங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், கடும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், தொடர் கனமழையால் 1,158 குடும்பங்களும், 4,008 தனி நபர்களும் பாதிப்படைந்து உள்ளனர். 3 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன. 381 வீடுகள் பகுதியளவாக சேதமடைந்து உள்ளன. 131 பேர் தற்காலிக பாதுகாப்பான மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசர உதவிக்கு 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, மீட்பு பணிகளை முடுக்கி விடும்படியும் மற்றும் தடையில்லா நிவாரண உதவி கிடைக்கவும் வழி செய்யும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவு
இதனிடையே, இந்த துயர நிகழ்வு குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இலங்கையில் சமீபத்திய நிலச்சரிவுகள் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பெரும் சேதங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது என்று கூறியுள்ளது. மேலும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை மக்களுக்கு எப்போதும் துணையாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளது.