பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அரசியல் களம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. தற்போது அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச விலகுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச விலகுவதாக அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்குதல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், அந்த பதிவில் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"எனது நாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் நான் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்களது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அழகப் பெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து சஜித் பிரேமதாச ஆரவு கோரியதாக தகவல் வெளியாகியது. அதன் பின்னர் இரவு வேளையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு மாறுதல்கள் நடந்திருக்கலாமென கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அழகப் பெரும அதிபராக தேர்வானால், பிரதமர் பதவி சஜித்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே முற்று முழுதாக ரணில் விக்ரமசிங்கவை அதிபர் பதவிக்கு கொண்டுவரக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுவதாகவே இந்த முடிவாக இருக்கலாம் என இலங்கை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதேபோல், இலங்கைக்கு உதவ வேண்டி இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று டெல்லியில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு நன்றி தெரிவித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர் டிவீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நாளை யார் வேண்டுமானாலும் இலங்கையின் அதிபராக வரலாம். ஆனால் இந்திய அரசு பெரும் துயரத்திலும், சீர்குலைவிலும் உள்ள இலங்கைக்கு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்