இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அடைக்கலம் கேட்கவில்லை என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 


இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். அவர் எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை. நாங்களும் அடைக்கலம் கொடுக்க வில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


 






 


முழு பின்னணி என்ன? 


அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதற்கு ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் எனக்கூறி, அவர்கள் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் ராஜபக்ச சகோதரர்களில் இளையவரும் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி பதவி விலகினார். அதனைத்தொடர்ந்து போராட்டம் வலுத்த நிலையில் கடந்த மே 9 ஆம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே அதனைத்தொடர்ந்து, கடந்த மே 12 அன்று புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார்.


அதன் பின்னரும் பொருளாதார நெருக்கடி குறையவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இந்த சூழ்நிலையில்தான் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கடந்த 9 ஆம் தேதி மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. போராட்டம் வெடிக்கும் என்பதை முன்னமே தெரிந்து கொண்ட, கோட்ட பய ராஜபக்ச அங்கிருந்து தப்பி விட்டார்.


தொடர்ந்து போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த, இன்று பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அனைத்துக்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தி, வருகிற 20 ஆம் தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்தன. இந்த நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரசிங்கேயை நியமித்து அதிபர் உத்தரவிட்டார். இதனிடையே அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக, நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டுமென கோட்டபய ராஜ பக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார்.


இதனையடுத்து நேற்று இரவு குடும்பத்தினருடன் விமானப்படை மூலம் மாலத்தீவுக்கு தப்பிச்சென்ற அவர் இன்று தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இந்த நிலையில்தான் இவ்வாறான விளக்கத்தை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.